பண்ருட்டி :
பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் செம்மொழி மாநாடு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர் மாதாந்திர இயல்புக் கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் பச்சையப்பன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் கோதண்டபாணி முன்னிலை வகித்தார். கமிஷனர் உமாமகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
முருகன் (அ.தி.மு.க., ):
விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது. இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு முகாமில் உள்ள தமிழர்கள் தண்ணீர் கிடைக்காமல் பாதித்துள்ள நிலையில் செம்மொழி மாநாட்டிற்கு பாராட்டு தெரிவித்த தீர்மானத்தை எதிர்த்து அ.தி.மு.க., ம.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்கிறோம். இதனைத் தொடர்ந்து அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க., உறுப்பினர்கள் வெளியே சென்ற நிலையில் தி.மு.க., கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி அனைத்து தீர்மானங்கள் நிறைவேறியதாக கூறி தேசியகீதம் ஒலிக்க கூறினார். இதனையடுத்து ஊழியர்கள் தேசிய கீதம் பாடியதும் சேர்மன் உள்ளிட்ட அனைத்து தி.மு.க., கவுன்சிலர்கள் வெளியேறினர்.
ஒரு நிமிட கூட்டம்:
பண்ருட்டி நகரமன்ற கூட்டம் காலை 11.30க்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 11.45க்கு சேர்மன் பச்சையப்பன், கவுன்சிலர்கள் நகர்மன்ற கூடத்திற்கு வந்தனர். ஆனால் நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் யாரும் கூட்ட அரங்கிற்கு வரவில்லை. பின் 11.55க்கு சேர்மன் உதவியாளர் ஜார்ஜ் வந்தார். 12 மணிக்கு கமிஷனர் உமாமகேஸ்வரி, சுகாதார அலுவலர் ராஜேந்திரன் வந்தனர். கூட்டம் 12.10க்கு தமிழ்தாய் வாழ்த்துடன் துவங்கியது. தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி 12.13க்கு முடிந்தது. 12.14க்கு தீர்மானம் படிக்கத் துவங்கியதும் அ.தி.மு.க., வினர் வெளிநடப்பு செய்ததும் 12.15க்கு தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு கூட்டம் முடிக்கப் பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக