மின்விளக்கு வசதி இல்லாத சிதம்பரம்- அண்ணாமலை நகர் ரயில்வே மேம்பாலம்.
சிதம்பரம்:
சிதம்பரம்- அண்ணாமலை நகர் இடையே ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டு ஓராண்டாகியும் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. சிதம்பரம்-அண்ணாமலைநகர் இடையே ரூ.13.31 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவின் போது விரைவில் பாலத்தில் மின்விளக்கு வசதி செய்யப்படும் என மாநில அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதன் உறுதியளித்தார். ஆனால் ஓராண்டாகியும் பாலம் இருண்டுதான் கிடக்கிறது.
இதுபற்றி நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் யாரும் கண்டு கொள்ளவில்லை. பாலத்தில் மின்விளக்கு இல்லாததால் மாணவர்கள் விபத்தில் சிக்குவது தொடர்கிறது. சமீபத்தில் தென்ஆப்பிரிகாவை சேர்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் இவ்விபத்தில் சிக்கி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்களை தடுக்க இருபுறமும் ரவுண்டானா அமைக்கவும், மின்விளக்கு வசதி செய்யக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அண்மையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீர்மானம் போட்டு மாவட்ட ஆட்சியர் முதல் அமைச்சர்கள் வரை மனு அனுப்பியுள்ளனர். ஆனாலும் அதிகாரிகள் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. அதிமுக வெற்றி பெற்ற சிதம்பரம் தொகுதி என்பதால் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக எம்.எல்.ஏ. அருண்மொழிதேவன் குற்றம் சாட்டினார். எனவே கடலூர் மாவட்ட ஆட்சியர் மனிதநேய அடிப்படையில் நேரடியாக தலையிட்டு மின்விளக்கு வசதியும் இருபுறமும் ரவுண்டானாவும் அமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக