மங்களூர்:
சிறுமுளை - கோடங்குடி சாலைட்டக்குடி அடுத்த சிறுமுளை - கோடங்குடிக்கு செல்லும் மெட்டல் சாலை பழுதடைந்து போக்குவரத்திற்கு லாயக் கற்ற நிலையில் உள்ளது.
மங்களூர் ஒன்றியம் திட்டக்குடி அடுத்த சிறுமுளை பெரிய ஏரி வழியாக கோடங்குடி கிராமம் வரையிலான 2.5 கி.மீ., தூரத்திற்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் மெட்டல் சாலை போடப்பட்டது. இவ்வழியாக சுமார் 300 ஏக்கர் விளை நிலங்களில் விவசாயிகள் விளைவிக்கும் நெல், மணிலா பயிர்கள் சிறுமுளை, பெருமுளை வழியாக திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. கரும்பு பயிர் கோடங்குடி, போத்திரமங்கலம், ஆவினங்குடி வழியாக இறையூர் சர்க்கரை ஆலைக்கு கொண்டு சென்றனர். இதன் மூலம் திட்டக்குடி வழியாக இறையூர் சர்க்கரை ஆலைக்குச் செல்லும் சுமார் 6 கி.மீ., தூரம் நேர விரயம் தவிர்க்கப்பட்டு வந்தது. தற்போது மெட்டல் சாலை பழுதடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியுள்ளது.
இருபுறமும் ஏரியின் களிமண் கரை மட்டுமே தெரிகிறது. முன்னதாக அமைக்கப் பட்ட மெட்டல் சாலை மழை காலங்களில் நீரின் அரிப்பினால் முற்றிலுமாக பெயர்ந்து காணாமல் போனது. மழைக் காலங்களில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு விளை பொருட்களை நிலங்களிலிருந்து வெளியேற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் நெல், கரும்பு போன்ற பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகுவதுடன் விவசாயிகளுக்கு அதிகளவு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிராவல் அடித்து பேட்ஜ் - ஒர்க் செய்து அவ்வப்போது சீரமைக்கப்படும். இருப்பினும் முறையாக அரசின் நிதி பெற்று சிறுமுளை - கோடங்குடி வரையிலான 2.5 கி.மீ., வரை பாரத் நிர்மாண் திட்டம் அல்லது கரும்பு அபிவிருத்தி திட்டம் ஆகிய திட்டத்தின் மூலமாகவோ தரமான சாலை அமைத்தால் விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு செல்ல ஏற்றதாக அமையும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக