நெய்வேலி :
என்எல்சியில் காலவரையற்ற வேலைநிறுத்தம் புதன்கிழமை (ஜூன் 30) இரவுப் பணி முதல் துவங்கியது.
என்எல்சி தொழிலாளர்களுக்கான ஊதியமாற்று ஒப்பந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தி என்எல்சி தொழிலாளர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடுவார்கள் என தொமுச செயலர் ஆர்.கோபாலன் அறிவித்தார். அலவன்ஸ் மற்றும் இன்கிரிமென்ட் ஆகியன முன்தேதியிட்டு பெறுவதில் தொழிற்சங்கத்திற்கும், நிர்வாகத்திற்கும் இடையே முரண்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் ஒப்பந்தத்தை விரைந்து முடித்திட வலியுறுத்தி மே 30-ல் நிர்வாகத்திடம் ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கின. இதையடுத்து நிர்வாகத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே சமரச முயற்சி ஏற்படுத்தும் விதமாக மத்திய தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் சென்னையில் ஜூன் 11 மற்றும் 15-ல் நடந்த பேச்சில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனிடையே ஜூன் 29-ல் நிர்வாகத்திற்கும், தொழிற்சங்கத்திற்கும்
இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இன்கிரிமென்ட்டுக்கான நிலுவைத் தொகையை 01-06-2009 முதல் வழங்க நிர்வாகம் முன்வந்தது. இதை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்க மறுத்துவிட்டனர். இதையடுத்து மத்திய தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் சென்னையில் புதன்கிழமை பேச்சு நடத்த தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தையை புறக்கணித்துவிட்டு, வேலைநிறுத்த அறிவிப்புக் கூட்டத்தை புதன்கிழமை நடத்தினர். இக்கூட்டத்திற்கு தொமுச தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தொமுச அலுவலகச் செயலர் காத்தவராயன், பாமக தொழிற்சங்கத் தலைவர் பெருமாள், செயலர் திலகர், பொருளாளர் ஏஞ்சலின் மோனிகா, அலுவலகச் செயலர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் வேலைநிறுத்தம் குறித்து விளக்கிப் பேசினர். இறுதியாக தொமுச செயலர் ஆர்.கோபாலன் காலவரையற்ற வேலைநிறுத்தம் குறித்து அறிவிப்புச் செய்தார்.
இ தில் மருத்துவமனை, குடிநீர் மற்றும் மின்சாரப் பிரிவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும், ஏனைய தொழில் மற்றும் அலுவலகப் பிரிவுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பர் எனவும் அறிவித்தார். இதையடுத்து புதன்கிழமை இரவுப் பணிமுதல் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக