சிதம்பரம்:
சிதம்பரத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நிதி பெற்றுத் தந்தது யார் என்பது குறித்த பிரச்னை தொடர்பாக, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள், நாற்காலிகளை வீசி ரகளையில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி கூட்டம், தலைவர் பவுஜியா பேகம் தலைமையில் நேற்று காலை துவங்கியது. நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
தலைவர்:
கடந்த 10 தினங்களுக்கு முன், குடிநீர் வசதி கோரி கலெக்டரைச் சந்தித்தேன். அதைத் தொடர்ந்து 18 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினார். அதற்கு நகராட்சி சார்பில் கலெக்டருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
கவுன்சிலர் ஜேம்ஸ் விஜயராகவன் (தி.மு.க.,):
இப்பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னை குறித்து செய்தித்தாளில் படித்த அமைச்சர் பன்னீர்செல்வம், கலெக்டரிடம் பேசி நிதி பெற்றுத் தந்தார். நீங்கள் பெற்றுத் தந்ததாகக் கூறுவது தவறான செய்தி. கடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து எழுதி வைத்த, "மினிட்' புத்தகத்தை காட்ட வேண்டும். அதில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெரிய வேண்டும்.
தலைவர்:
கூட்டம் முடிந்ததும், "மினிட்' புத்தகத்தைக் காட்டுகிறேன்.
ஜேம்ஸ் விஜயராகவன்:
இப்போதே அனைத்து உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் காட்ட வேண்டும்.
தலைவர்:
புத்தகம் எனது அறையில் உள்ளது.
ஜேம்ஸ் விஜயராகவன்:
கூட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு எடுத்து வாருங்கள். (இதைத் தொடர்ந்து கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது) கூட்டத்தை ஐந்து நிமிடம் ஒத்தி வைப்பதாகக் கூறிவிட்டு, தலைவர் பவுஜியா பேகம் "மினிட்' புத்தகத்தை எடுத்து வந்தார். மீண்டும் 10 நிமிடத்திற்கு பிறகு கூட்டம் துவங்கியது.
ஜேம்ஸ் விஜயராகவன்:
கடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் எத்தனை பணிகள் நடந்தன? கட்டட ஆய்வாளர் கூட்டத்திற்கு ஏன் வரவில்லை? எந்த கேள்விக்கும் முறையாக பதிலளிப்பதில்லை. சிதம்பரம் பகுதியில் உள்ள மக்களின் கோரிக்கைகள் மற்றும் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை என கூறி, ஆத்திரத்துடன் மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டில் மற்றும் நாற்காலியை தூக்கி வீசினார்.
இதையடுத்து, கவுன்சிலர்கள் அப்பு சந்திரசேகர் (தி.மு.க.,), முகம்மது ஜியாவுதீன் (காங்.,), வி.சி., மற்றும் சுயேச்சை உறுப்பினர்களும் தி.மு.க.,விற்கு ஆதரவாக நாற்காலி, மைக்கை தூக்கி வீசி, கூட்ட அரங்கில் இருந்த டியூப் லைட்டை உடைத்தனர். மேலும், துடைப்பத்தால் தன்னைத் தானே அடித்துக் கொண்டனர். இதனால், பதட்டம் நிலவியது. இதைத் தொடர்ந்து, மறு தேதி அறிவிக்காமல் கூட்டத்தை ஒத்தி வைப்பதாக கூறிவிட்டு, தலைவர் தனது அறைக்குச் சென்றார். அங்கு, நான்காவது வார்டைச் சேர்ந்த பெண்கள் காலி குடத்துடன் தலைவரை முற்றுகையிட்டனர். பின், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள், கூட்ட அறையை விட்டு வெளியில் சென்று கோஷம் எழுப்பினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக