உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 01, 2010

அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் நிலை பரிதாபம்! படிக்கும் நேரத்தில் மாடுகள் விரட்டும் அவலம்

புவனகிரி : 

                 கீரப்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளியில் அடிப்படை வசதியில்லை, பாதுகாப்பின்றி திறந்த வெளி மைதானமாக இருப்பதால் கால்நடைகள் உள்ளே வந்து மாணவர்களை மிரட்டுகிறது. இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடாரமாகவும் மாறி விடுகிறது.

                 சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளியில் கீரப்பாளையம், வயலூர், சிலுவைபுரம், எண்ணாநகரம், செட்டிக்குளம், கண்ணங்குடி, வடஹரிராஜபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற் பட்ட கிராமங்களிலிருந்து விவசாய குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப் பள்ளியில் கடந்த எஸ். எஸ்.எல்.சி., பொதுத் தேர் வில் 75 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர். கல்வித்தரம் உயர்ந்துவரும் நிலையில் பாதுகாப் பாற்ற நிலையில் பள்ளி வளாகம் உள்ளது. பள்ளியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் எந்த நேரத்திலும் மாடுகள் மாணவர்கள் படிக்கும் இடத்திற்கு கூட்டம், கூட் டமாக வருவதால் மாணவர்கள் புத்தக பையை தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடிப்பதே வேலையாக உள்ளது. மாடுகள் மட்டுமின்றி நாய்கள் கூட்டம் கூட்டாக பள்ளிகளில் புகுந்து மாணவ, மாணவிகளை அச்சுறுத்தி வருகின்றன. தினமும் காலையில் மரத்தடியில் சிறப்பு வகுப்பு நடத்துகின்றனர். மாடுகள் வருவதால், அந்த மாணவர்கள் எந்த நேரத்திலும் ஓட்டம் பிடிக்கும் நிலையில் உஷாராக உட்கார்ந்து படிக்கின்றனர். சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தில் புகுந்து மது அருந்துவது உள்ளிட்ட பலான விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

                     காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களும், ஆசிரியர்களும் பிராந்தி பாட்டில்களை பார்த்து முகம் சுளித்து அவற்றை அவர்களே அப்புறப்படுத்துவதை வாடிக்கையாக செய்து வருகின்றனர். மாணவர்கள் சிறுநீர் கழிக்கவும், இயற்கை உபாதைக்காகவும் ஊராட்சி நிர்வாகம் கழிவறைகள் கட்டிக் கொடுத்தது. காலப் போக்கில் தண்ணீர் பிரச்னை மற்றும் போதிய பராமரிப்பு இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் பள்ளிக்குள் குடித்து விட்டு கும்மாளமிடும் சமூக விரோதிகள் கழிவறையை நாசம் செய்ததோடு சேதப்படுத்தியுள்ளனர். இதனால் மாணவ, மாணவிகள் இயற்கை உபாதைக்காக முட்புதர்கள் போன்ற மறைவிடங்களை தேடிச் செல்லும் அவல நிலை உள்ளது. இதில் மாணவிகள் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. 2007-08ம் ஆண்டு அரசு மூலம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பள்ளியில் பல லட்சம் ரூபாய் செலவில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது.

                  கூடைப்பந்து, கைப்பந்து, கால் பந்து, டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாட தனித்தனியாக இடம் தேர்வு செய்யப்பட்டு தளங்கள் அமைக்கப்பட்டன. அவைகளை பராமரிப்பதற்கு ஆண்டு தோறும் 10 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால் தற்போது விளையாட்டு மைதானத்தை தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கூடைப்பந்து மைதானம் காட்டாமணக்கு செடிகள் வளர்ந்த காட்டிற்கு நடுவே வெறும் கம்பி மட்டுமே தெரியும் நிலையில் உள்ளது. மற்ற விளையாட்டு இடங்கள் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. சுடுகாட்டிற்கு பாதுகாப்பான சுற்றுச் சுவர், தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் அரசு மாணவர்களின் நலன் கருதி கீரப்பாளையம் பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் தான் பதில் சொல்ல வேண்டும்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior