உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 03, 2010

கடலூர் மீது கரிசனம் காட்டும் ரயில்வே துறை ?


திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் முடிவடையாத பயணிகள் நடைப்பாலம்.
 
கடலூர்:

           தமிழகத்தில் தொன்மை வாய்ந்த நகரங்களில் ஒன்றான கடலூர், தென்னக ரயில்வேயால் தொடர்ந்து  புறக்கணிக்கப்பட்டு வருகிறது.  திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் நிற்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக ரயில்வே அதிகாரிகளின் வாக்குறுதி தொடர்ந்து காற்றில் பறக்கவிடப்பட்டு உள்ளது. 

                       200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை- ராமேஸ்வரம் ரயில்பாதையில் அமைந்து இருக்கும் நகரம் கடலூர். ஆங்கிலேயர்கள் வருகையின் போது தமிழகத்தின் தலைநகரமாகவே சிறிதுகாலம் கடலூர் விளங்கி இருக்கிறது. சென்னை- ராமேஸ்வரம் ரயில்பாதையில், 122 கி.மீ. நீளம் விழுப்புரம்- மயிலாடுதுறை ரயில்பாதையை அகலப் பாதையாக மாற்றும் திட்டம் நிறைவேற 2007 முதல் 3 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. 23-4-2010 அன்று விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப் பாதையில் ரயில்கள் இயங்கத் தொடங்கியதும், கடலூர் மாவட்ட மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு வசதியாகச் செல்ல வேண்டும் என்ற பயணக் கனவு நிறைவேறும் என்று காத்து இருந்தனர். 

              ஆனால் இந்த மார்க்கத்தில் ரயில்கள் இயக்கம் தொடங்கியதும்தான், இலவு காத்தக் கிளிகளாக்கப் பட்டனர் கடலூர் மக்கள் என்பது தெரிய வந்தது. கடலூர் மாவட்டத்தில் எதையும் போராடிப் பெறும் சரியான அரசில் தலைமை இல்லை என்பதைப் புரிந்து கொண்ட தென்னக ரயில்வே, தொன்மை நகராம் கடலூரை முற்றிலும் புறக்கணிப்பதை உணர முடிந்தது. விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் இரு பயணிகள் ரயிலைத் தவிர, மற்ற ரயில்களால் கடலூர் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. மீட்டர் கேஜ் பாதை இருந்தபோது இயக்கப்பட்ட ஒரே ஒரு பகல்நேர எக்ஸ்பிரஸ் ரயிலும், அகலப் பாதையாக்கப்பட்டதும், கடலூரின் மையப் பகுதியில் அமைந்துள்ள திருப்பாப்புலியூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் நிற்காது என்ற அறிவிப்பு கடலூர் மக்களைப் பெரிதும் கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.

               திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் நிற்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தின. இறுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடத்திய போராட்டத்தின்போது, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில், ஜூலை மாதம் வெளியாகும் கால அட்டவணையில், திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று, ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித்து இருந்தனர். புதிய ரயில்வே கால அட்டவணையும் வெளியாகி விட்டது. ஆனால் கடலூர் மக்களின் கோரிக்கை நிறைவேறவில்லை. ரயில்வே அதிகாரிகளின் வாக்குறுதி காற்றில் கரைந்து விட்டது. 

              வாரம் ஒருமுறை இயக்கப்படும் வாராணசி- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில், வாரம் இருமுறை இயக்கப்படும் சென்னை- மதுரை எக்ஸ்பிரஸ், கடலூருக்கு நள்ளிரவில் வரும் சென்னை- நாகூர் எக்ஸ்பிரஸ் ஆகியவை திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்வதால் கடலூர் மக்களுக்கு பெரிதாகப் பயன் ஏதும் இல்லை.  எனினும் எழும்பூர்- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், திருப்பதி- மதுரை எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் விழுப்புரத்தை விட்டால் மாயவரத்தில்தான் நிற்கும் என்று, தென்னக ரயில்வே அறிவித்து இருப்பது, கடலூர் மக்களை பெரிதும் அதிருப்திக்குள்ளாக்கியது. 

               சென்னை- ராமேஸ்வரம் மார்க்கத்தில் ரயில்கள் இயக்கப்படுவதற்கு முக்கியக் காரணமே, பக்தர்கள் அந்தப் பாதையில் அமைந்து இருக்கும் புகழ்மிக்க புராதனக் கோயில்களை தரிசிப்பதற்காகத்தான். அந்த வகையில் திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலையும், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலையும், தென்னக ரயில்வே புறக்கணிக்கக் காரணம் என்ன என்று தெரியவில்லை என்கிறார்கள் சைவ, வைணவ பக்தர்கள். ÷எனவே கடலூர் மாவட்ட மக்கள் பிற நகரங்களுக்கு, குறிப்பாகத் தென் மாவட்டங்களுக்குச் செல்ல இன்னமும், மக்களை மாக்களாகவும், புளி மூட்டைகளாகவும் அடைத்துச் செல்லும் பஸ்களைத்தான் நம்ப வேண்டும் என்பது எத்தனை வேதனையான விஷயம்?

              மேலும் திருப்பாப்புலியூர், சிதம்பரம் ரயில் நிலையங்களில், ரயில் பாதைகளை பயணிகள் கடந்து செல்லும் நடைப் பாலங்கள் அமைக்கும் பணி, ஓராண்டுக்கு முன் தொடங்கப்பட்டும் இன்னமும் முடிக்கப்படவில்லை. திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் இரு ரயில்களை நிறுத்தி வைக்கும் லூப் லைன் வசதிகூட இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. மற்ற ரயில் நிலையங்களிலும் பல பணிகள் முடிவடையாமல் இருப்பதாக ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

இதற்கு என்னதான் தீர்வு? 

                  மக்கள் கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior