உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 03, 2010

மரத்தடி மகா ராஜாக்கள்... விருத்தாசலம் பள்ளி மாணவர்களின் அவலநிலை


வெட்டவெளியில் தொடக்கப் பள்ளி மாணவர்கள். மரத்தடியில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்
விருத்தாசலம்:

         விருத்தாசலத்தை அடுத்த கோ.ஆதனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் போதுமான கட்டட வசதி இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. 

                இப் பள்ளி 1915-ம் ஆண்டு, 1 ஏக்கர் 30 சென்ட் பரப்பளவில் தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்டது. இது நடுநிலைப் பள்ளியாகி, பின்னர் 1990-ல் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இவ்வாறு தரம் உயர்த்தப்பட்டு 20 ஆண்டுகளாகியும் உயர்நிலைப் பள்ளிக்கென்று தனி இடம் இல்லாததால், தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடங்களிலேயே  6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

             தற்போது 1-முதல் 5-ம் வகுப்பு வரை 177 மாணவர்களும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை 465 ( 2010-2011 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் கடந்த ஆண்டு 6 முதல் 10 வரை படித்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 465) மாணவர்களும் படித்து வருகின்றனர். இந்நிலையில் தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சுமார் 650 மாணவர்கள் படிப்பதற்கு வகுப்பறைகள் போதுமானதாக இல்லை. பள்ளியைச் சுற்றி கடந்த ஆண்டு மதில் சுவர் அமைக்கப்பட்டது. மதில்சுவர் அமைக்கப்பட்ட பள்ளியின் மேற்கு பகுதியில் 3 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் ஒன்று உள்ளது. இது தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.

                        ஆனால் 3 வகுப்பறைகள் மட்டுமே கொண்ட இக்  கட்டடம் தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு போதுமானதாக இல்லாததாலும், மழைக் காலங்களில் அக் கட்டடத்துக்கு செல்லும் வழியில் உள்ள வாரியில் வெள்ளநீர் ஓடும் என்பதாலும், அனைத்து மாணவர்களையும் ஒரே வளாகத்திலேயே அமரவைத்துள்ளனர். இவ்வாறு 1 முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களை ஒரே வளாகத்தில் உள்ள கட்டடங்களில் உட்கார வைக்கின்றனர்.போதுமான கட்டட வசதி இல்லை என்பதால், ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க, பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய வளாகத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான ஒரு சில வகுப்பையும், மரத்தடியிலும் நடத்துகின்றனர்.

                இதுபோல் சில உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கும் மரத்தடியில் பாடம் நடத்தப்படுகிறது. தற்போது மரத்தடியில் பாடம் நடத்தக்கூடிய சூழல் இருந்தாலும், இன்னும் சில மாதங்களில் பருவமழை தொடங்கினால் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாக நேரிடும் என்கின்றனர் அப்பள்ளியைச் சேர்ந்தவர்கள். பள்ளியில் சிமென்ட் ஓடாலான திறந்தவெளி கட்டடங்கள் உள்ளன. இது மாணவர்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று கூறினாலும், தொடக்க நிலை மாணவர்களுக்கு அரசு, செயல்படுத்தி வரும் செயல்வழிக் கற்றல் முறைக்கு உரியதாக இந்த கட்டடங்கள் இல்லை. மேலும் உயர்நிலை மாணவர்களுக்கும் இந்த கட்டடத்தில் பாடம் நடத்துவது சிரமம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் தமிழக அரசு, கோ.ஆதனூர் உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனி வளாகத்தில் போதுமான வகுப்பறைகள் கொண்ட கட்டடங்களை ஏற்படுத்தித் தரவேண்டும். இதுவே இப்பள்ளியில் பயிலும் அனைத்து ஆசிரிய, மாணவ, மாணவிகளின் கோரிக்கையாகும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior