கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன ரோந்து படகு நேற்று முதல் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டது. மும்பை தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய கடலோர பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கூடுதல் போலீசார், கூடுதல் ரோந்து படகுகள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது. பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர் எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்க, கடலோர காவல் படை, இந்திய கப்பல் படை மற்றும் உள்ளூர் போலீஸ் என உயர் அதிகாரிகள் அளவிலான ஒத்திகைகள் நடத்தப் பட்டு பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டு வருகிறது.
கடலூர் கடலோர காவல் படையில் ஒரு இன்ஸ்பெக்டர், 5 சப் இன்ஸ்பெக்டர்கள், 14 போலீசார் பணியில் உள்ளனர். கடலோர பாதுகாப்பு பணிக்கென கடலூர் துறை முகத்திலிருந்து படகு மூலம் ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன ரோந்து படகு வழங்கப்பட்டது. இந்த ரோந்து படகை தமிழக கடலோர பாதுகாப்பு படை குழுமத்தின் எஸ்.பி., முகமது அனிபா நேற்று பார்வையிட்டு ரோந்து பணியை துவக்கிவைத்து டி.எஸ்.பி., சின்னசாமி, இன்ஸ்பெக்டர் வசந்தன், சப் இன்ஸ்பெக்டர் காளியப்பன் ஆகியோருடன் ரோந்து சென்றார்.படகை முன்னாள் ராணுவ வீரரும் தற்போதைய கடலோர காவல் படை தொழில் நுட்ப உதவி ஆய்வாளருமான குணசேகரன் செலுத்தினார். இந்த அதிநவீன ரோந்து படகில் 275 திறன் கொண்ட இரண்டு இன்ஜின்கள் பொருத்துப்பட்டுள்ளது. தொலை தூரத்தில் வரும் படகு மற்றும் கப்பல்களை கண்காணிக்கும் திறன் கொண்ட சுழலும் விளக்கு, சுழன்று தாக்கும் வகையில் துப்பாக்கி பொருத்தும் ஸ்டேன் என அதிநவீனமாக வடிவமைக்கப்பட் டுள்ளது. கடலூர் பகுதியில் மேலும் 510 திறன் கொண்ட பெரிய அளவிலான ரோந்து படகு விரைவில் வழங்கப்படவுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக