உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 03, 2010

நெய்வேலியில் ஊழியர்கள் ஸ்டிரைக் தீவிரம் : மின் வினியோகம் இன்று பாதிக்கும்?





நெய்வேலி : 

                என்.எல்.சி., தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நான்காவது நாளாகத் தொடர்வதால், இன்று முதல் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எல்.எல்.சி.,யில் பணிபுரியும் 14 ஆயிரத்து 232 தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தை, நிலுவைத் தொகை வழங்குவதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இழுபறி நீடித்து வருகிறது.

                 ஊதிய மாற்று ஒப்பந்தத்தை ஜூலை 1 முதல் அமல்படுத்த வேண்டுமென, அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கங்களான தொ.மு.ச., மற்றும் பா.தொ.ச.,வினர் கோரிக்கை விடுத்திருந்தனர். தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு ஏற்படவில்லை. தொழிற் சங்கத்தினர், கடந்த மே 31ல் வேலை நிறுத்தத்திற் கான அறிவிப்பு நோட்டீசை நிர்வாகத்திடம் கொடுத்தனர். சென்னையில் உள்ள மண்டல தொழிலாளர் நல கமிஷனர் அலுவலகத்தில் ஜூன் 30ல் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பேச்சு வார்த்தைக்கு நிபந்தனையின் பேரில் அழைக்கப்பட்டதால், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, தொழிலாளர் நல கமிஷனர் ஜெகன்நாத ராவ் அன்றைய தினமே நெய்வேலிக்கு வந்து, தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் என்.எல்.சி., நிர்வாக குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதிலும் முடிவு எட்டப்படாததால், கடந்த 30ம் தேதி இரவு 10 மணி முதல் காலவரையற்ற போராட்டம் துவங்குவதாக தொ.மு.ச., பொதுச் செயலர் கோபாலன், தொழிலாளர்கள் மத்தியில் அறிவித்தார்.

                   நேற்று மூன்றாவது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்த நிலையில், சென்னையில் மண்டல தொழிலாளர் நல கமிஷனர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால், அதிலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. எனவே, நான்காவது நாளாக இன்றும் வேலை நிறுத்தம் தொடர்கிறது. இதனால், மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. என்.எல்.சி.,யின் முதல் அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட், முதல் அனல் மின் நிலையவிரிவாக்கத்தில் 420 மெகாவாட், இரண்டாம் அனல் மின் நிலையத்தில் 1,470 மெகாவாட் என மொத்தம் 2,490 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

                  முதல் அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் 600 மெகாவாட் மின்சாரமும் முழுமையாக தமிழகத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. என்.எல்.சி.,யின் மொத்த மின் உற்பத்தியான 2,490 மெகாவாட் மின்சாரத்தில், முதன் அனல் மின்நிலையத்தின் 600 மெகாவாட் மின்சாரம் போக மீதமுள்ள 1,890 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தென்னிந்திய மின் தொகுப்பு எனப்படும், "கிரிட்' வாயிலாக தென்னிந்திய மாநிலங் களாக தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கும் சதவீத அடிப்படையில் வழங்கப் படுகிறது.

                   தமிழகத்தை பொறுத்தவரை என்.எல்.சி.,யின் முதல் அனல் மின் நிலைய உற்பத்தி 600 மெகாவாட் மற்றும் "கிரிட்' வாயிலாக பெறப்படும் 500 மெகாவாட் என மொத்தம் 1,100 மெகாவாட் மின்சாரம், தமிழக மின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. தற்போது என்.எல்.சி.,யில் இன்று நான்காம் நாளாக தொடரும் வேலைநிறுத்தம் காரணமாக, முதல் அனல் மின்நிலையத்தின் ஒரு மின் உற்பத்தி பிரிவு முழுமையாக மின் உற்பத்தியில் ஈடுபடவில்லை. முதல் அனல் மின் நிலையத்தில் மீதமுள்ள மின் உற்பத்தி பிரிவுகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக மின் உற்பத்தி குறைந்து கொண்டே செல்கிறது. இதனால், என்.எல்.சி., வாயிலாக தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வரும் மின் உற்பத்தியில் பெரும் அளவில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே, தமிழக முதல்வர், என்.எல்.சி., வேலை நிறுத்த விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்தாவிட்டால், தமிழகம் இருளில் மூழ்குவது தவிர்க்க முடியாததாகி விடும்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior