உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 18, 2009

மார்ச் 1ம் தேதி பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கு 23ம் தேதி : பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

"பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், வரும் மார்ச் 1ல் துவங்கி, 22ம் தேதி வரை நடைபெறும்' என, அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. 10ம் வகுப்பு தேர்வு, மார்ச் 23ல் துவங்கி, ஏப்ரல் 7ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் 2 தேர்வை, ஆறு லட்சத்து 89 ஆயிரத்து 937 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை, இன்னும் இறுதி செய்யப்படவில்லை. எனினும், பத்தரை லட்சம் மாணவ, மாணவியர் இத்தேர்வை எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளி பொதுத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், தேர்வு அட்டவணை வெளியாகும் தேதியை மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இம்முறை, தேர்வில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவது குறித்து, தேர்வுத்துறை பரிசீலனை செய்திருந்தது. பிளஸ் 2 தேர்வுடன் சேர்த்து பத்தாம் வகுப்பு தேர்வை நடத்துவது, செய்முறைத் தேர்வை, எழுத்துத் தேர்வுக்குப் பின் நடத்துவது போன்ற மாற்றங்கள் பரிசீலனையில் இருந்தன. ஆனால், மாற்றம் செய்வதாக இருந்தால், அது குறித்து முன்கூட்டியே மாணவர்களுக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும் என்பதாலும், கடைசி நேரத்தில் மாற்றங்களைச் செய்தால், மாணவர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் என்பதாலும், தேர்வு முறையில் எந்தவித மாற்றங்களையும் செய்யாமல், வழக்கம் போல் நடத்துவதற்கு தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, பிளஸ் 2 தேர்வுகளும், பத்தாம் வகுப்பு தேர்வுகளும் தனித்தனியே நடக்கின்றன. பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 1ல் துவங்கி 22ம் தேதி வரை நடக்கின்றன. மூன்று லட்சத்து 22 ஆயிரத்து 484 மாணவர்கள், மூன்று லட்சத்து 67 ஆயிரத்து 453 மாணவியர் என, மொத்தம் ஆறு லட்சத்து 89 ஆயிரத்து 937 மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். கடந்த தேர்வை, ஆறு லட்சத்து 47 ஆயிரத்து 632 பேர் எழுதினர். இந்த ஆண்டு, 42 ஆயிரத்து 305 மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி., - மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி., ஆகிய நான்கு தேர்வுகளுமே, மார்ச் 23ல் துவங்குகின்றன. இதில், மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள், ஏப்ரல் 9ம் தேதி வரையும், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் ஓ.எஸ்.எல்.சி., தேர்வுகள், ஏப்ரல் 7ம் தேதி வரையும் நடக்கின்றன. இந்த தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை, இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தேர்வெழுதும் மாணவர்கள் விவரங்களை மீண்டும் ஒருமுறை சரிபார்ப்பதற்காக, பள்ளிகளுக்கு பட்டியல் அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் பட்டியல் ஓரிரு நாளில் கிடைத்ததும், சரியான புள்ளி விவரம் தெரியவரும். எனினும், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை மட்டும் கடந்த முறை எட்டு லட்சத்து 42 ஆயிரத்து 350 பேர் எழுதினர். இது, ஒன்பது லட்சமாக உயரும் என கூறப்படுகிறது. இதர மூன்று போர்டுகளையும் சேர்த்தால், தேர்வெழுதக்கூடிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை பத்தரை லட்சத்தை தாண்டும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டு விட்டதால், தேர்வை நடத்துவதற்காக மற்ற ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும். குறிப்பாக, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மாணவர்கள் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை, பிப்ரவரி முதல் வாரத்தில் துவக்கி நடத்துவதற்கு தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அட்டவணை, இம்மாத இறுதிக்குள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்படி, மார்ச் 1ல் பிளஸ் 2 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய பாடத் தேர்வுகளுக்கு மாணவர்கள் நன்றாக தயாராவதற்கு ஏற்ப, போதிய இடைவெளியும் தரப்பட்டுள்ளது. மொழிப்பாட தேர்வுகள் மார்ச் 5ம் தேதி வரை நடக்கின்றன. அதன்பின், இரு நாள் இடைவெளிக்குப் பின், 8ம் தேதி இயற்பியல் தேர்வு நடக்கிறது. மீண்டும் இரு நாள் இடைவெளிக்குப் பின், 11ம் தேதி வேதியியல் தேர்வு நடக்கிறது. 15ம் தேதி கணிதம், விலங்கியல் தேர்வுகளும், மூன்று நாள் இடைவெளிக்குப் பின் 19ம் தேதி உயிரியல், தாவரவியல் தேர்வுகளும் நடக்க உள்ளன.




தேர்வு நேரம் எப்போது?: தேர்வு அட்டவணையை வெளியிட்ட தேர்வுத்துறை, தேர்வு நேரத்தை அறிவிக்கவில்லை. வழக்கமான நேரத்தில் துவங்கி நடக்கும் என்றாலும், சில தேர்வுகள் பிற்பகலிலும் நடக்கும். எனவே, காலைத் தேர்வுகள், பிற்பகல் தேர்வுகள் என்று குறிப்பிட்டு, தேர்வு நேரமும் வழக்கமாக அறிவிக்கப்படும். இந்த முறை, இது எதுவுமே இடம்பெறவில்லை. எனினும், பிளஸ் 2 தேர்வுகள் காலை 10.15க்கு துவங்கி, பிற்பகல் 1.15 வரையும் (மூன்று மணி நேரம்), 10ம் வகுப்பு தேர்வுகள், 10.15க்கு துவங்கி, 12.45க்கும் (இரண்டரை மணி நேரம்) முடிவடையும். தேர்வுகள், 10.15க்கு துவங்கினாலும், மாணவர்கள் 10 மணிக்கு, தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும். முதல் 10 நிமிடம், வினாத்தாளை படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிடம், பதிவெண் உள்ளிட்ட விவரங்களை விடைத்தாளில் பூர்த்தி செய்யவும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. விடை எழுதுவதற்கான நேரம், 10.15 மணிக்கு துவங்கும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior