நெய்வேலி, டிச.17:
அரையாண்டுத் தேர்வு நடந்து வரும் இத்தருணத்தில் கடந்த ஒருவாரமாக பெய்து வரும் தொடர் கனமழையால் பள்ளிகளுக்கு கட்டாய விடுமுறை அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு, தேர்வுகளும் தள்ளிவைக்கப்படும் என தினம் ஒரு அறிவிப்பு வெளியாகி வருவதால் நடப்புக் கல்வியாண்டில் அரையாண்டுத் தேர்வு முடிவடைந்தவுடன் விடப்படும் விடுமுறை ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நடப்புக் கல்வியாண்டின் அரையாண்டுத் தேர்வுகள் இம் மாதம் 10-ம் தேதி முதல் தொடங்கிவிட்டது.÷இந் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கிய மழை தொடர்ந்து பெய்து வருவதால், கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு டிசம்பர் 15 முதல் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படுகிறது.
தினந்தோறும் இரவில் தங்களது மாவட்டங்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகுமா? என்ற ஆவலில் மாணவர்கள் டிவி பார்க்கத் துவங்கிவிடுகின்றனர். அட்டவணை முறைப்படி நடைபெற வேண்டிய தேர்வுகளும் ரத்தாவதால், ரத்தான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாளில் தேர்வுகளை நடத்தி விடுமுறையை ரத்து செய்துவிடுவார்களோ என்ற கவலை மாணவர்களுக்கு எழுந்துள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்களை அழைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் போது தற்போது ரத்தாகும் தேர்வுகளை விடுமுறை நாளில் நடத்துவது குறித்து கேட்டறியப்பட்டது. இ தற்கு சில தலைமையாசிரியர்கள் ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்தலாம் என்றும்,வேறு சிலரோ விடுமுறை நாளில் நடத்தலாம் எனவும் ஆலோசனைக் கூறியதாகவும் தெரிகிறது. இருப்பினும் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை. கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள், எதிர்வரும் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருபவை. எனவே அந்த கல்வி நிறுவனங்களின் நிலையையும் கல்வித்துறை கேட்டறிய வேண்டிய சூழல் உள்ளது.
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமிர்தவள்ளி கூறியது:
மார்ச் மாதம் ஆண்டுத் தேர்வு நடைபெறவிருப்பதாலும், தற்போது விடுப்பட்ட விடுமுறை தினங்களை ஈடு செய்யும் விதமாக அரையாண்டுத் தேர்வு விடுமுறைகளை ரத்து செய்ய உத்தேசித்துள்ளோம். ரத்தான தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து செய்ய கருத்தையும் கேட்டறிந்த பின்னர்தான் ரத்தான தேர்வுகளை எப்போது நடத்தப்படும் என்று தெரியவரும் என்றார் அமிர்தவள்ளி.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக