கடலூர், டிச. 17:
தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக கடலூர் நகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள பல நகர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாள்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளான கே.என்.பேட்டை தானம் நகர், திருப்பாப்புலியூர் குப்பங்குளம், குண்டு உப்பளவாடி, சுத்துக்குளம், பெரியார் நகர், அழகப்பா நகர், ஆல்பேட்டை, புதுப்பாளையம் மணலி எஸ்டேட், கே.கே.நகர் உள்ளிட்ட பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.÷கே.கே. நகரில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியும் உள்ளன.
இப்பகுதியில் மழைநீர் தேங்கி அப்பகுதி மக்கள் பிரதானச் சாலைக்கு வரமுடியாமல் தவித்தனர். நகராட்சி உறுப்பினர் முத்து முயற்சியால் வியாழக்கிழமை பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு, தேங்கிய மழைநீர் உப்பனாற்றில் வடிய ஏற்பாடு செயயப்பட்டது. அதைத் தொடர்ந்து மழைநீர் வடிந்தது.
நகரில் ஏற்கெனவே பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் முன்னதாக, தற்போதைய மழையால் மீண்டும் சாலைகள் மிகமோசமாக பழுதடைந்து விட்டன. இதனால் மக்கள் போக்குவரத்து பெரும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறது. நெல்லிக்குப்பம் சாலை, வண்டிப்பாளையம சாலை மற்றும் பிரதானச் சாலைகளில் இருந்து பிரியும் நகராட்சி சாலைகள் பெரும்பாலானவை மிக மோசமாக பழுதடைந்து கிடக்கின்றன. இதனால் ஆட்டோ ரிக்ஷா, வாடகை கார் ஓட்டுநர்கள் அப் பகுதிகளுக்கு வரமறுக்கிறார்கள்.
கேப்பர் மலையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் வண்டிப்பாளையம் சாலை பெருமளவுக்கு சேதம் அடைந்து கிடக்கிறது. இதில் சைக்கிள்கள் கூடச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இச்சாலையில் உள்ள சிறிய பாலம் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டதால் அந்த வழியாகச் செல்லும் வாகனங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் சரவணன் நகர், நத்தவெளி சாலையோரம் உள்ள நகர்கள், அம்பேத்கார் நகர், பி.டி.ஜே.கார்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வரும் மழைநீர், வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால், மழைநீர் வழிந்தோட வழியின்றி வண்டிப்பாளையம் சாலையோரம் உள்ள கோயில் விளைநிலத்தில் பல நாள்களாகத் தேங்கிக் கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்களின் சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக