சிதம்பரம், டிச.17:
கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுக்காக்களில் ஆண்டு தோறும் ஏற்பட்டு வரும் வெள்ள அபாயத்தை தடுக்க மாநில அரசு நிரந்தர தீர்வு காண கோரியதன் பேரில் சென்னை சேப்பாக்கம் நீர் ஆதாரங்கள் துறை முதன்மை பொறியாளருக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் இரு திட்டங்கள் செயல்படுத்த முன்மொழிவு கடிதம் வியாழக்கிழமை அனுப்பப்பட்டுள்ளது என கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.
சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
வெள்ள அபாயத்தை தடுக்க நிரந்தர தீர்வு என்ன என்பதை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நீர் ஆதாரங்கள் துறை முதன்மை பொறியாளரை தொடர்பு கொள்ளுமாறு மாநில அரசால் வியாழக்கிழமை கோரப்பட்டது.÷அதன் பேரில் முதன்மை பொறியாளரை தொடர்பு கொண்டு இரு திட்டங்களை தெரிவித்து முன்மொழிவு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது வடிகால் பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுக்காகளுக்கும் வரும் கருவாட்டுஓடை, செங்கால்ஓடை, பாளையங்கோட்டை ஓடை, ஆண்டிப்பள்ளம்ஓடை ஆகியவற்றின் உபரிநீரை ஆங்காங்கே தேக்கி வைக்கவும், வீராணம் ஏரியில் உள்ள மணல்மேடுகள் மற்றும் காடுகளை அகற்றி, கரைகளை பலப்படுத்தி ஏரியின் கொள்ளளவை உயர்த்துவது என இரு திட்டங்களை செயல்படுத்த நீர் ஆதாரங்கள் துறைக்கு முன்மொழிவு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.வீராணம் ஏரியின் 28 மதகுகளை சீரமைக்கவும், சேத்தியாத்தோப்பு பாழ்வாய்க்காலில் ரெகுலேட்டர் அமைக்கவும், ஆறு, வாய்க்கால்களை பலப்படுத்த ரூ.23 கோடியே 68 லட்சம் நிதி ஏற்கெனவே ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் மழை நின்றவுடன் தொடங்கப்படும்.
க டலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் வரை 125.47 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு வியாழக்கிழமை (டிசம்பர் 17) வரை 223.99 மி.மீ. மழை இரு மடங்காக பெய்துள்ளது. இதில் டிசம்பர் மாதம் அதிக மழை பெய்துள்ளதாலும், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்து வரும் உபரி நீரினால் தற்போது வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வீராணம் ஏரிக்கு கூடுதலாக வரும் உபரி நீரை வெளியேற்றப்படுவதால் குறிப்பாக காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும், மக்களும் எதிர்நோக்கியுள்ள பிரச்னையாகும்.
ஏரியின் நீர்மட்டம் வியாழக்கிழமை மாலை 46.4 அடியை எட்டியுள்ளது. ஏரியிலிருந்து 5 ஆயிரம் கனஅடி நீர் வெள்ளியங்கால்ஓடையிலும், வி.என்.எஸ். அணைக்கட்டிலும் வெளியேற்றப்படுகிறது. அண்டை மாவட்டங்களிலிருந்து வரும் உபரி நீர் குறைந்து விட்டதால் ஏரிக்கு நீர்வரத்து 3ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.
நீர்மட்டம் 46.2 அடி குறைந்தவுடன் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றுவது நிறுத்தப்படும். காட் டுமன்னார்கோவில் அருகே உள்ள திருநாரையூர், நடுத்திட்டு, வீரநத்தம், சர்வராஜன்பேட்டை, நந்திமங்கலம், வானாதிராயன்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் 1700 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது வியாழக்கிழமை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
வெள்ளிக்கிழமை மீண்டும் முழுமையாக கணக்கெடுத்து பயிர்சேதம் குறித்தும், நிவாரணம் எவ்வளவு வழங்குவது குறித்தும் அரசு பரிந்துரைக்கு அனுப்பப்படும். கடலூர் மாவட்டத்தில் இதுவரை மழை, வெள்ளத்தில் பகுதியாக 56 வீடுகளும், முழுமையாக 15 வீடுகளும் சேதமடைந்துள்ளது. கடலூர் தாலுக்கா தானூரில் மனித இழப்பு ஒன்றும் ஏற்பட்டுள்ளது. 245 ஏரி, குளங்களில் 145 முழுமையாகவும், 105 ஏரி, குளங்கள் 75 சதவீதம் நிரம்பியுள்ளது.
மேலும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் வெள்ளியங்கால்ஓடை, விஎன்எஸ் அணைக்கட்டு கரை ஒரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது என ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், சிதம்பரம் கோட்டாட்சியர் ஜி.ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக