சிதம்பரம் :
சிதம்பரம் வேலைவாய்ப்பு பதிவு முகாமில் பிளஸ் 2 முடிந்த மாணவ, மாணவியர் ஆயிரக்கணக்கில் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஒரே நேரத்தில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மாணவ, மாணவியர் கூடுவதை தவிர்க்க சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம் ஆகிய இடங்களில் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகா பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவியர், அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வேலை வாய்ப்பு பதிவு முகாமில் பதிவு செய்தனர். இரண்டாம் நாளான நேற்று அதிகாலை முதல் அதிக அளவில் கூட்டம் கூடியது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், போலீசார் வரவழைக்கப்பட்டனர். குறுகிய இடத்தில் முகாம் நடத்தப்பட்டதாலும், பதிவு செய்யும் அதிகாரிகள் நான்கு பேர் மட்டுமே இருந்ததாலும் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மாணவ, மாணவியர் அவதியடைந்தனர். மேலும் மாணவ, மாணவியர் காலை முதல் சாப்பிடாமல் இருந்ததாலும் வெயில் கொடுமையாலும் ஒரு சில மாணவியர் மயங்கி விழுந்தனர். முறையான ஏற்பாடுகள் செய்யாததால் மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக