உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 29, 2010

கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் இன்று முதல் மீன் பிடிக்கச் செல்கிறார்கள்

கடலூர்:

                45 நாள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை (மே 29) காலை முதல் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்கிறார்கள். மீன்கள் இனப்பெருக்கக் காலம் என்பதால், ஏப்ரல் 15-ம் தேதி முதல் கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்து இருந்தது. இதனால் கடலூர் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தும் பெரிய படகுகள் மீன்பிடிக்கச் செல்ல வில்லை. பெரிய படகுகள் மீன் பிடிக்கச் செல்லாததால், மீன்வரத்து குறைந்து, விலைகள் சாதாரண நடுத்தர மக்கள் மீன்களை வாங்க முடியாத அளவுக்குத் தாறுமாறாக உயர்ந்து விட்டன. மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறுகையில், கடலூர் மாவட்ட மீனவர்கள் சனிக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு சில படகுகளில் மீன்பிடிக்கச் செல்கின்றனர். காலை 6 மணிக்குப் பல படகுகள் கடலுக்குள் செல்லும். மீன்பிடித் தடைக் காலத்தில் சுமார் 700 பெரிய படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. 25 முதல் 50 தொழிலாளர்கள் வரை செல்லும் 100 படகுகளும், 8 தொழிலாளர்கள் செல்லும் படகுகள் 100-ம், 6 தொழிலாளர்கள் செல்லும் படகுகள் 400-ம், 4 தொழிலாளர்கள் செல்லும் படகுகள் 100-ம், கடலூர் மாவட்டத்தில் கடந்த 45 நாள்களாக மீன் பிடிக்க முடியவில்லை.  பெரிய படகுகள் மீன் பிடிக்கச் செல்வதால் வஞ்சரம், கொடுவா, மத்தி, சங்கரா உள்ளிட்ட மீன்கள் அதிகம் பிடிபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீன்வரத்து அதிகமானால், மீன் விலைகளும் குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.  மீன்பிடித் தடைகாலத்தில் மீனவர் குடும்பங்களுக்கு நிவாரணமாகத் தலா ரூ.800 வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார். ஆனால் மீன்பிடித் தடைக் காலம் முடிவடையும் நாள் வரை நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior