கடலூர்:
அக்னி நட்சத்திரம் (கத்திரிவெயில்) வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றதை முன்னிட்டு, கடலூர் பாடலீஸ்வரர் கோயிலில் மூலவரைக் குளிர்விக்க சிறப்பு பூஜைகள் நடந்தன.கடந்த 14 நாள்களாக வாட்டி வதைத்த, அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரிவெயில், வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. கத்திரிவெயில் காரணமாக கடலூரில் வெப்பம் 106 டிகிரி வரை வெயில் உயர்ந்துள்ளது. கத்திரிவெயிலின் தாக்கத்தை மனிதர்கள் அனுபவிப்பதுபோல், கடவுள்களும் மனமுவந்து ஏற்றுக் கொள்வதாக புராணங்கள் கூறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். எனவே கோடைக் காலத்தில் குறிப்பாகக் கத்திரிவெயில் தாக்கும் காலத்தில் சிவன் கோயில்களில், மூலவர் விக்கிரகங்களுக்கு மேலே, குளிர்ந்த நீர் இறைவனின் மேல் தாராபாத்திரத்தில் இருந்து தண்ணீர் சொட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும்.
கடலூர் பாடலீஸ்வரர் கோயிலிலும் இதேபோல கடந்த 14 நாள்களாக தாராபாத்திரத்தில் இருந்து குளிர்ந்த நீர் மூலவர் தலையில் விழும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வெள்ளிக்கிழமை தாராபாத்திரத்தை அகற்றி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பூமி குளிரவும், பருவமழை உரிய காலத்தில் பெய்யவும், மக்கள் நலம் பெறவும் வேண்டி, ஆகம விதிகளின்படி பாடலீஸ்வரர் கோயிலில் 108 வெள்ளிக் கலச பூஜைகள் வியாழக்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றன. கங்கை, காவிரி, யமுனை, கோதாவரி, சிந்து, சரஸ்வதி, நர்மதை ஆறுகளில் இருந்து தருவிக்கப்பட்ட புனித நீர், 108 வெள்ளிக் கலசங்களில் நிரப்பப்பட்டு இருந்தன. தாமரை வாகனத்தில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன் அமர்ந்து இருக்க, எதிரில் புனித நீர் வெள்ளிக் கலசங்கள் வைக்கப்பட்டு, வியாழக்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டன.வெள்ளிக்கிழமை புனித நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மீண்டும் சிறப்பு பூஜைகள் நடந்தன. கருவறையில் கட்டப்பட்டு இருந்த தாராபாத்திரம் அகற்றப்பட்டது. சிறப்பு பூஜைகளை மகாதேவ குருக்கள் தலைமையில், நாகராஜ குருக்கள், ராஜேஷ் குருக்கள் ஆகியோர் நடத்தினர். இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகநாதன், கோயில் நிர்வாக அலுவலர் மேனகா, அலுவலக மேலாளர் பாண்டுரங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக