சிதம்பரம்:
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வெள்ளிக்கிழமை கடைசி நாள் என்பதால் சிதம்பரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரே மையத்தில் பதிவுசெய்ய மாணவ, மாணவியர்கள் குவிந்தனர். சில மாணவிகள் மயக்கமடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே முகாமில் பதிவு செய்ய தேதி நீட்டிப்பு செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மே 26-ம் தேதிதான் கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலிருந்து தலைமை ஆசிரியர்களுக்கு மதிப்பெண்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின்னர் பள்ளிகளில் மே 27-ம் தேதி பிற்பகலில்தான் மாணவ, மாணவியர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மே 28-ம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது.சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாமில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இரு வட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே மையத்தில் பதிவுசெய்ய வேண்டும் என அறிவித்ததால் சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை திரளான மாணவ, மாணவியர்கள் குவிந்தனர்.
அதிகப்படியான மாணவர்கள் குவிந்ததால் விரைவாக பதிவு செய்யமுடியாமல் அலுவலர்கள் திணறினர். வெயில் அதிகமாக இருந்ததால் பதிவுசெய்ய வந்த மாணவியர்களில் சிலர் மயக்கம் போட்டு விழுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களிடம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கான விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றபின் பள்ளி மூலமாகவே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு சிதம்பரம் நகரில் ஒரே மையத்தில் இரு வட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்ததால் மாணவ, மாணவியர்கள் பதிவு செய்ய நீண்ட நேரம் வெயிலில் வரிசையில் நின்று கடும் அவதியுற்றனர். மேலும் பல மாணவ, மாணவியர்கள் பதிவு செய்ய முடியாமல் திரும்பினர். எனவே வேலைவாய்ப்பு பதிவு முகாம் தேதியை மேலும் நீட்டிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக