கடலூர்:
தமிழகத்தில் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு, மேலும் 200 வேன்கள் விரைவில் வழங்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பனனீர்செல்வம் தெரிவித்தார்.
கடலூர் அருகே பூண்டியாங்குப்பம் கிராமத்தில் புதன்கிழமை பகுதிநேர ரேஷன் கடையைத் திறந்து வைத்து அமைச்சர் பேசியது:
ஒரு மாதத்துக்கு முன் மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று இங்கு ரேஷன் கடை திறக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 1,17,057 பேருக்கு ரூ.326 கோடி செலவிடப்பட்டு இருக்கிறது. பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு உள்ளன. நாளொன்றுக்கு 700 பேருக்கு ரூ.2.5 கோடி செலவு செய்யப்படுகிறது. ஏழை மக்களின் உயிர் காக்கும் சேவையைச் செய்து வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையில், தற்போது 385 வாகனங்கள் உள்ளன. தொலைபேசி அழைப்பு வந்த 15 நிமிடத்தில் இவைகள் நோயாளியைச் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்க்கின்றன. இதை 5 நிமிடத்திலேயே கொண்டு வந்து சேர்க்கும் வகையில், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு, மேலும் 200 வாகனங்கள் விரைவில் வழங்கப்பட இருக்கிறது என்றார் அமைச்சர்.விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் வெங்கடேசன் வரவேற்றார். மத்திய கூட்டுறவு வங்கியின் தனி அலுவலர் ந.மிருணாளினி, ஊராட்சி மன்றத் தலைவர் ரவிசங்கர், கல்விக்குழுத் தலைவர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கடலூர் தனியார் மருத்துவமனையில் திட்டக்குடியைச் சேர்ந்த வீரமுத்து (72) என்பவருக்கு, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை, அமைச்சர் பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக