உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 17, 2010

பகலில் எரியும் தெரு விளக்குகளால் மின்சாரம் விரயமாகிறது : உள்ளாட்சி பிரதிநிதிகள்கவனிப்பார்களா?

கடலூர்: 

                   மின்சாரப் பற்றாக்குறை காரணமாக கட்டாய மின் வெட்டு அமல்படுத்தி வரும் இன்றைய சூழ்நிலையில் உள்ளாட்சி நிர்வாகிகளின் அலட்சியத்தால் பட்டப் பகலில் தெரு விளக்குகளை எரியவிட்டு மின்சாரம் விரயமாக்கப்பட்டு வருகிறது.

                    நீரின்றி அமையாது உலகு என் பது போல் இன்றைய விஞ்ஞான உலகில் மின்சாரமின்றி மனித வாழ்க்கை இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் அத்தியாவசிய தேவையான மின்சாரம் தற் போதைய மக்கள் தொகை பெருக் கத்தினால் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப மின் உற்பத்தி இல்லாத காரணத்தினால் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் தினசரி மூன்று மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. இவை தவிர பராமரிப்பு என்ற பெயரில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் மாதத்திற்கு ஒரு நாள் 9 மணி நேரம் மின்சாரம் வினியோகம் நிறுத்தப்படுகிறது. மேலும், மின் வாரியம் மூலம் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பல்வேறு வகைகளில் விளம்பரம் செய்து வருகிறது. அதில் அதிக மின்சாரம் உபயோகமாகும் மின்சாதன பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக அதிக வீடுகளில் போடப் பட்டுள்ள குண்டு பல்புகளுக்குப் பதிலாக குறைந்த மின்சாரத்தில் அதிக வெளிச்சம் தரும் அதே நேரத்தில் வெப்பத்தை வெளியிடாத "சி.எப்.எல்.,' பல்புகளை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

                    தற்போது நிலவி வரும் மின் வெட்டை தவிர்த்திட ஒவ்வொருவரும் கட்டாயமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் தமிழக அரசின் ஓர் அங்கமான உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பற்ற செயலால் மின்சாரம் விரயமாக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 682 கிராம ஊராட்சிகள், 13 ஓன்றியங்கள், 16 பேரூராட்சிகள், ஐந்து நகராட்சிகள் உள்ளன. இதன் மூலமே குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி வருகிறது. இந்த உள்ளாட்சி அமைப்புகளே தெரு விளக்கு வசதிகளை ஏற்படுத்தி நிர்வகித்து வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் அவரவர் பகுதிகளில் "ஹைமாஸ்' விளக்கு மற்றும் சோடியம் ஆவி விளக்குகளை அதிக அளவில் அமைத்து வருகின்றனர்.

                     இரவில் மக்கள் நடமாட்டம் மிக குறைவாக உள்ள பகுதிகளில் கூட அதிக மின்சாரம் செலவாகும் சோடியம் மற்றும் மெர்க்குரி விளக்குகளை அமைத்துள்ளனர். டியூப் லைட் இருந்தாலே போதும் என்ற பகுதிகளில் கூட "ஹைமாஸ்' விளக்குகளை அமைத்துள்ளனர் மக்களிடம் நல்ல பெயரை வாங்க வேண்டும் என்பதற்காக அதிக வெளிச்சம் தரும் மின் விளக்குகளை அமைக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கவனிப்பதில்லை. இந்த தெரு விளக்குகளை தினசரி மாலை நேரத்தில் எரிய வைக்கவும், மறுநாள் காலை 6 மணிக்கு நிறுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஊழியர் தனது பணியை சரியாக செய்வதில்லை. அவர் நினைத்தால் தெரு விளக்கு எரியும். இல்லை என்றால் சாலைகள் இருளில் மூழ்கி கிடக்கும் என்ற நிலைதான் உள்ளது.

                           இதன் காரணமாக மாவட்டத்தில் பல பகுதிகளில் பகல் நேரங்களில் வீணாக தெருவிளக்குகள் எரிந்து கொண்டிருப்பதும், மற்றொரு பகுதிகளில் இரவில் தெரு விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கி கிடப்பதும் வாடிக்கையாக உள்ளது. இந்த குளறுபடிகளை சரி செய்ய வேண்டிய உள்ளாட்சி பிரதிநிதிகளும் தெரு விளக்குகள் அமைப்பதோடு தங்களது வேலை முடிந்து விட்டது என ஒதுங்கிக் கொள்கின்றனர். அந்தந்த பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகளும் தினசரி காலை நேரத்தில் தங்கள் பகுதிகளில் வலம் வந்தாலே பகலில் தெருவிளக்குகள் எரிவதை தவிர்க்கலாம். இதன் மூலம் விலை மதிப்பற்ற மின்சாரத்தை சேமிக்க முடியும். இதனை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உணர்த்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior