உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 19, 2010

நெல் உற்பத்தியைப் பெருக்கத் திட்டமிடாமல் எண்ணெய்ப் பனையை ஊக்குவிப்பதற்கு விவசாயிகள் கண்டனம்

கடலூர்:

                   நீர்வளம் கொண்ட கடலூர் மாவட்டத்தில், நெல் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்காமல், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் எண்ணெய்ப் பனையை வேளாண் துறை ஊக்குவிப்பதற்கு, விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர். கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது.

கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள்:

பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன்:

                டெல்டா பாசனப் பகுதிகள் வாய்க்கால் தூர்வாரும் பணியில், 20-க்கும் மேற்பட்ட வாய்க்கால்கள், ஏற்கெனவே 100 நாள் வேலைத் திட்டத்தில் தூர்வாரப்பட்டவைகள். தூர்வாருவதற்கு வாய்க்கால்களைப் பட்டியலிடுமுன் இதைச் சரிபார்க்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் பயறுவகைகள் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம் பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து உளுந்தை, வியாபாரிகள் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்கிறார்கள். எனவேதான் சிதம்பரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைவதற்குத் தடையாக இருக்கிறார்கள். இங்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் தாற்காலிகமாக அமைக்க ரூ. 5 லட்சம் ஒதுக்கப்பட்டதற்கு நன்றி. வேளாண் காப்பீட்டுத் திட்டம் குறித்து 17 சதவீதம் விவசாயிகள் மட்டுமே அறிந்து இருக்கிறார்கள். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நீர் வளம் உள்ள கடலூர் மாவட்டத்தில் தேவையில்லாமல் எண்ணெய்ப் பனை உற்பத்தியைப் பெருக்க வேளாண்துறை அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. எண்ணெய்ப் பனை கடலூர் மாவட்டத்துக்கு ஏற்றதல்ல. அது வழிமண்டலத்தில் உள்ள ஈரப்பதத்தை பெருமளவுக்கு உறிஞ்சி, அதிக வெப்பத்தை வெளியிடுகிறது. எண்ணெய்ப் பனை அதிகம் பயிரிடும் மலேஷியாவில் கூட, பாமாயிலை யாரும் பயன்படுத்துவது இல்லை. ஏற்றுமதிதான் செய்கிறார்கள். கடலூர் மாவட்டத்தில் நெல், மணிலா, பயறுவகைகள் உற்பத்தியை அதிகரிக்க புதிய தொழில்நுட்பங்களை அளிப்பதை விட்டு, எண்ணெய்ப் பனைக்கு கருத்தரங்கம் நடத்துவது கண்டனத்துக்கு உரியது. 

மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கச் செயலாளர் ரவீந்திரன்: 

             கடலூர் மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், விவசாயத்துக்குக் கடன் வழங்குவது குறைந்து வருகிறது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, பயிர்க் கடன் தொகையை அதிகரிக்க வேண்டும். பயறுவகைகள் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும்.

சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் விஜயகுமார்: 

               தனியாரிடம் உளுந்து விதை, விலை அதிகமாக உள்ளது. அரசு விதைப் பண்ணைகள் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.÷இல்லையேல் அரசு விதைப் பண்ணைகளில் தரமான உளுந்து விதைக்குத் தட்டுப்பாடு ஏற்படும்.

விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன்:

             விவசாயிகள் சிட்டா அடங்கல் கோரும்போது, வட்டாட்சியரின் கையொப்பம் கேட்பது சரியல்ல. கம்மாபுரத்தில் மழைமானி அமைத்ததற்கு நன்றி.

பட்டாம்பாக்கம் விவசாயிகள் சங்கத் தலைவர் வெங்கடபதி: 

             சித்தரசூர் புறவழிச் சாலையை விரைந்து முடிக்க வேண்டும். வேளாண் வணிகத் துறைமூலம் பண்ருட்டியில் நீர்வள நிலவளத் திட்டத்தில் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு எந்த அதிகாரியும் அதில் பங்கேற்காதது வருத்தம் அளிக்கிறது.

தியாகவல்லி சாமிக் கச்சிராயர்: 

           திருச்சோபுரம் உப்பனாற்றங்கரை ஆக்கிரமிப்புகளை அகற்றி மரம் நட வேண்டும். தியாகவல்லி மயானப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்: 

           பணப்பயிரை உற்பத்தி செய்யும் கரும்பு விவசாயிகளை அதிகாரிகள் நண்பர்களாக பாவிக்க வேண்டும். சிதம்பரம் உழவர் சந்தையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க, மாவட்ட விற்பனைக் குழு அதிகாரிகள், சிதம்பரம் நகராட்சி அதிகாரிகளை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும். குட்டைகளை தூர்த்து  விடக்கூடாது. தேவைப்பட்டால் மாற்றுக் குட்டைகளை உருவாக்க வேண்டும்.மின்சாரப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண, தனியாகக் குறைகேட்கும் கூட்டம் நடத்தப்படும் என்றார் ஆட்சியர்.

                     கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், வேளாண் அலுவலர் மணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior