சிதம்பரம் :
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களின் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு தொடர் ஓட்டம் சிதம்பரத்தில் நேற்று துவங்கியது. கோவையில் 23 முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாநாட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த ஏப். 20ம் தேதி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மினி மராத்தான் ஓட்டம் நடந்தது.
மாநாட்டை வலியுறுத்தி அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே பல்வேறுப் போட்டிகள் நடத்தியதில் முதல் மூன்று இடம் பிடித்தவர்கள் பட்டியல் மாநாட்டு குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் மாணவர்கள் 50 பேர் செம்மொழி சுடர் ஏந்தி தொடர் ஓட்டமாக கோவைக்கு செல்கின்றனர். அதற்கான வழியனுப்பு விழா நேற்று (18ம் தேதி) பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கின் முன் நடந்தது.துணைவேந்தர் ராமநாதன் தலைமை தாங்கி ஓட்டத்தை துவக்கி வைத்தார். பதிவாளர் ரத்தினசபாபதி, தொலை தூரக்கல்வி இயக்குனர் நாகேஸ்வரராவ், தேர்வுத்துறை அதிகாரி மீனாட்சி சுந்தரம், பி.ஆர்.ஓ., செல்வம், மற்றும் பல்கலைக்கழக துறை தலைவர்கள் வழியனுப்பி வைத்தனர்.தொடர் ஓட்டம் சிதம்பரம், விருத்தாசலம், வேப்பூர், ஆத்தூர், வாழப்பாடி வழியாக 20ம் தேதி சேலம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தை அடைகிறது. அங்கிருந்து பிற பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து கோவையில் நடைபெறும் மாநாட்டு அரங்கை அடைகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக