தியாகதுருகம் :
தாலிகட்டும் நேரத்தில் மணமகனை பிடிக்கவில்லை என்று, சினிமா பாணியில் தாலியை தட்டிவிட்டு நடையை கட்டினார் மணப்பெண். அதே மணமேடையில் அத்தை மகளை மணந்தார் மணமகன். இச்சம்பவம் தியாகதுருகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோணான்குப்பம் கிராமத்தைச்சேர்ந்த சின்னதுரை- அன்னலட்சுமி தம்பதி மகள் சுதா(22). இவரது தாய் மாமன், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அழகுவேல்- பாஞ்சாலை மகன் உத்திராபதி(27). இவர்களுக்கு தியாகதுருகம் ஸ்டார் திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமேடையில் மணமகன் உத்திராபதி, மணமகள் சுதா வந்து அமர்ந்தனர். சடங்கு சம்பிரதாயங்கள் நடந்தேறின. முகூர்த்த நேரம் குறிக்கப்பட்டிருந்த காலை 7 மணிக்கு சுதா கழுத்தில் உத்திராபதி தாலிகட்டும் வேளையில், சினிமாவில் வரும் காட்சியைப்போல், தாலியை தட்டிவிட்டு மணமேடையில் இருந்து எழுந்தார் மணப்பெண் சுதா. "எனக்கு மாமன் உத்திராபதியை பிடிக்கவில்லை; இன்னொரு மாமன் மகன் பாக்யராஜை காதலிக்கிறேன். அவரையே திருமணம் செய்து கொள்வேன்' என்று கூறிவிட்டு மணமகள் அறைக்கு சென்றுவிட்டார்.
கலகலப்பாக இருந்த திருமண மண்டபத்தில் நிசப்தம் நிலவியது. மகளிடம் பெற்றோர் கெஞ்சினர். மாமன் மகன் பாக்யராஜை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சுதா உறுதியாக கூறிவிட்டார். அதை பார்த்த உத்திராபதியின் உறவினர்கள், வேறொரு பெண்ணுக்கு அதே மேடையில் திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த உத்திராபதியின் அத்தை தனம்- தண்டபாணி மகள் நிர்மலா (21) என்பவரை அவரின் சம்மதம் பெற்று திருமணம் செய்துவைக்க அழைத்து வந்தனர். காலை 9.15 மணிக்கு நிர்மலாவின் கழுத்தில் உத்திராபதி தாலிகட்டினார். கூடியிருந்த உறவினர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்து வாழ்த்து தெரிவித்தனர். அதுவரை மணமகள் அறையில் இருந்த சுதா அவரின் உறவினர்களுடன் மண்டபத்தை விட்டு வெளியேறினார்.
மணமகன் உத்திராபதி கூறுகையில்,
"சுதா எனது அக்கா மகள் தான். தன்னை பிடிக்கவில்லை என்று திருமண ஏற்பாடு செய்வதற்கு முன்பே, என்னிடம் கூறியிருந்தால் இப்பிரச்னை ஏற்பட்டிருக்காது. உறவினர்கள் மத்தியில் எனது திருமணம் நின்று, நான் பரிதவித்த நேரத்தில் எனது வாழ்க்கை துணையாக வந்த நிர்மலாவை, வரதட்சணை எதுவும் பெறாமல் திருமணம் செய்து கொண்டேன். கடைசி வரை இவருடன் மகிழ்ச்சியுடன் வாழ்வேன்' என்றார் நெகிழ்ச்சியுடன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக