திட்டக்குடி :
ராமநத்தம் அருகே டாஸ்மாக் ஊழியரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் கோரிய வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார். கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த பாளையம் டாஸ்மாக் பார் சூப்பர்வைசர் கண்ணன் (35). இவரிடம் கடந்த 2ம் தேதி வாகையூர் கிருஷ்ணமேனன் (30), விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் செல்லதுரை (36) இருவரும் வார இதழ் நிருபர்கள்; கூடுதல் விலையில் பீர் விற்பதை படம் பிடித்துள்ளோம் என்று மிரட்டி 20 ஆயிரம் ரூபாய் பெற்றனர். பின்னர், போட்டோ இருப்பதாக கூறி வெற்று "சிடி'யை கொடுத்து விட்டுச் சென்றனர். இதுகுறித்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து கிருஷ்ணமேனனை கைது செய்து தலைமறைவான செல்லதுரையை தேடி வந்தனர். இந்நிலையில், செல்லதுரை முன் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அங்கு திட்டக்குடி கோர்ட்டில் சரணடைந்து ஜாமீனுக்கு மனு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதால் நேற்று முன்தினம் திட்டக்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட்டில் செல்லதுரை சரணடைந்து, ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம், ஜாமீன் மனுவை ரத்து செய்து 15 நாள் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து செல்லதுரை கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக