உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 19, 2010

கடலூர் கொண்டங்கி ஏரி வாய்க்கால் தூர்ந்ததால் வறண்டு கிடக்கிறது

(1) வறண்டு கிடக்கும் கடலூர் கொண்டங்கி ஏரி. (2) ஏரியின் தெற்குக் கரையை பலவீனப்படுத்தும் வகையில், தனியாரால் சரளைக் கற்களுக்காக வெட்டி எடுக்கும் மலைப்பகுதி
கடலூர்:
             ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடலூர் மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்த கொண்டங்கி ஏரி, வரத்து வாய்க்கால் தூர்ந்து கிடப்பதால் தற்போது வறண்டு கிடக்கிறது. 
               கடலூர் கேப்பர் மலையில் சுமார் 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்து இருப்பது கொண்டங்கி ஏரி. ஏரியின் கிழக்குக்கரை தவிர ஏனைய 3 கரைகளும் கேப்பர் மலையால் சூழப்பட்டு, ஏற்காடு, ஊட்டி ஏரிகள் போல், ஆங்காங்கே சிறு சிறு ஓடைகளுடன், முந்திரித் தோப்புகள், பலா, பனை உள்ளிட்ட ஏராளமான மரங்கள் சூழ அழகுடன் காட்சி அளிக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடலூர் நகரின் (கடலூர் முதுநகர்தான் அப்போதைய கடலூர் நகரம்) குடிநீர் தேவை முழுவதும் கொண்டங்கி ஏரி நீரைக் கொண்டுதான் பூர்த்தி செய்யப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. கொண்டங்கி ஏரியில் இருந்து சற்று தொலைவில் அமைந்து இருப்பது சுத்துக்குளம் குடியிருப்புப் பகுதி. ஆனால், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இது சுத்தக்குளம் என்று அழைக்கப்பட்டது. கொண்டங்கி ஏரியில் நிரப்பி வைக்கப்படும் நீரை கொஞ்சம் கொஞ்சமாக சுத்தக் குளத்துக்குக் கொண்டுவந்து, சுத்தம் செய்து, அங்கு இருந்து கடலூர் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. 
                    மேலும் இந்த ஏரியின் பாசன ஆயக்கட்டு சுமார் 5 ஆயிரம் ஏக்கர். ஏரியில் இருந்து போதிய தண்ணீர் கிடைக்காததால், ஆங்காங்கே ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து சிறப்பாக விவசாயம் செய்யப்படுகிறது. ஏரிக்கு கெடிலம் ஆற்றில் அமைந்துள்ள திருவந்திபுரம் அணையில் இருந்து, தண்ணீர் விநியோகத்துக்கு பண்டைக் காலத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் கெடிலம் அணையோ தூர்ந்து கிடப்பது குறித்து யார் யாரோ சுட்டிக்காட்டியும், வரம் கொடுக்க வேண்டிய மாநில அரசின் கடைக்கண் பார்வை ஏனோ இப்பகுதியில் விழவில்லை.கெடிலம் ஆற்றில் இருந்து கொண்டங்கி ஏரிக்கு வரும் வாய்க்கால் தலைப்பிலேயே ஒரு கி.மீ. தூரம், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கிக் கொண்டதால் குடியிருப்புகளாகவும், பல அடுக்கு மாடிக் கட்டடங்களாகவும் மாறிவிட்டன. அதன்பிறகு வாய்க்கால் சீராக உள்ளது.  திருவந்திபுரம் அணை தூர்ந்து கிடப்பதால், அணைக்கு வரும் கெடிலம் ஆற்று நீர் முழுவதும், ஆண்டுதோறும் கடலில் கலந்து வீணாகிறது. எனினும் வடகிழக்குப் பருவமழை காலத்தில், கேப்பர் மலையில் இருந்து வழிந்தோடும் நீரால் கொண்டங்கி ஏரிக்குத் தண்ணீர் கிடைக்கிறது. 
                 ஆனால், ஏரியில் உள்ள 3 ஷட்டர்களும் பல ஆண்டுகளாகப் பழுதாகிக் கிடப்பதால் ஏரியில் தண்ணீர் தேங்கி நிற்பதே இல்லை என்கிறார்கள் ஆயக்கட்டு விவசாயிகள். ஆனாலும் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில், வேலை கொடுப்பதற்காகவே இந்த ஏரி பயன்படுகிறது. 100 நாள் வேலை திட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், இங்கு தூர்வாரும் பணியில் ஈடுபடுவதை ஆண்டுதோறும் காணலாம். ஆண்டுதோறும் தூர்வாரியும் ஏரியின் மேற்குப் பகுதி பள்ளமாகவும், பாசன மதகுகள் இருக்கும் கிழக்குப் பகுதி, மண் மேடிட்டுக் கிடக்கும் நிலையை மாற்ற முடியவில்லை என்கிறார்கள் விவசாயிகள்.கேப்பர் மலையால் அரணாகக் காணப்படும் ஏரியின் தெற்குக் கரை, மலையில் எப்படியோ பட்டா வாங்கி இருப்பதாகக் கூறி, சரளைக் கற்களைக் கொள்ளை அடிக்கும் கும்பலுக்கு இறையாக சிதைக்கப்பட்டு வருகிறது. 
                   இதனால் ஏரிக்கு தண்ணீர் வந்தாலும், தெற்குக்கரை உடைப்பெடுத்து நீர் வீணாகிவிடும் நிலை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. அமைச்சராக ப.உ.சண்முகம் இருந்தபோது கொண்டங்கி ஏரியைப் பார்வையிட்டு, இதன் இயற்கை அழகைக் கண்டு வியந்ததாகவும், படகு சவாரியுடன் அமையத் தகுந்த, அருமையான சுற்றுலாத் தலமாகவும், கடலூர் நகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய ஏற்றதாகவும் இதை மாற்றமுடியும் என்று தெரிவித்ததாக, இப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.கொண்டங்கி ஏரியின் கரைகளையும், ஷட்டர்களையும் சீரமைத்து, தண்ணீர் வரத்துக்குக் கெடிலம் ஆற்றில் இருந்து ஏற்பாடு செய்யவும், இதைச் சுற்றுலாத் தலமாக மாற்றவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கடலூர் மக்களின் ஆவல்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior