கிள்ளை :
சிதம்பரம் அருகே குடித்து விட்டு தகராறு செய்த கணவரை கழுத்து நெரித்து கொலை செய்து விட்டு கீழே விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடிய மனைவி உள்ளிட்ட மூவரை பேரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் அடுத்த வடக்கு சாவடியைச் சேர்ந்தவர் முருகவேல் (30). இவரது மனைவி அம்புஜவள்ளி (24). இவர்களுக்கு அருண் குமார் (6), அபினேஷ் (4), அசின் (2) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். முருகவேல் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.கடந்த 12ம் தேதி முருகவேல் குடித்து விட்டு தகராறு செய்ததால் அம்புஜவள்ளி அதே பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். 16ம் தேதி மாமியார் வீட்டிற்கு சென்ற முருகவேல் குடிபோதையில் சாலையோரம் இறந்து கிடந்தார்.
இதற்கிடையே மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக முருகவேலின் தந்தை மச்சகேந்திரன் கிள்ளை போலீசில் கொடுத்த புகாரைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.இந்நிலையில் பிரேத பரிசோதனையில் முருகவேல் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில், முருகவேலை அவரது மனைவி அம்புஜவள்ளி கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. உடன் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி அம்புஜவள்ளி (25), அவரது தந்தை காசிநாதன் (48), மாமன் மணிவண்ணன் (39) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
கணவனை கொலை செய்தது குறித்து அம்புஜவள்ளி போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில், "நான் 9ம் வகுப்பு படிக்கும் போதே முருகவேலை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் அடிக்கடி குடித்து விட்டு தகராறு செய்தார். எவ்வளவோ சொல்லியும் திருந்தவில்லை.கடந்த 16ம் தேதி என் தாய் வீட்டிற்கு வந்து தகராறு செய்தார். அதனால் ஆத்திரமடைந்த நான் அவரை கீழே தள்ளி கழுத்தை நெரித்தேன். அவர் மயக்கமடைந்ததால் பயந்து போய் குடித்து விட்டு கீழே விழுந்ததாக எல்லோரிடமும் கூறினேன். உடன் சிதம்பரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்' என தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக