
அண்ணா பல்கலைக்கழகங்களின் உறுப்புக் கல்லூரிகளில் தொடங்கப்படும் தமிழ் வழி சிவில், மெக்கானிக்கல் பாடப் பிரிவுகளில் சேருவதற்கு தனி கலந்தாய்வு எதுவும் கிடையாது;
பொதுவாக நடத்தப்படும் பி.இ. கலந்தாய்விலேயே அந்த இடங்கள் நிரப்பப்படும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறினார். சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கீழ் விழுப்புரம், திண்டிவனம், ஆரணி ஆகிய இடங்களில் 3 உறுப்புக் கல்லூரிகளும், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் அரியலூர், ராமநாதபுரம், திருக்குவளை, பண்ருட்டி, பட்டுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் 6 கல்லூரிகள், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் நாகர்கோயில், தூத்துக்குடியில் 2 கல்லூரிகள் என மொத்தம் 11 உறுப்பு கல்லூரிகள் உள்ளன.
இது தவிர, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியிலும் சிவில், மெக்கானிக்கல் பாடப் பிரிவுகள் உள்ளன. இவற்றில் 2010-11-ம் கல்வியாண்டு முதல் தமிழ் வழியில் சிவில், மெக்கானிக்கல் ஆகிய பாடப் பிரிவுகள் தொடங்கப்படும்; ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 60 இடங்கள் இருக்கும் என்று உயர்கல்வி அமைச்சர் க. பொன்முடி அறிவித்திருந்தார். இந்தப் படிப்புகளில் சேருவதற்கு தனி கலந்தாய்வு நடத்தப்படுமா என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் உள்ளது.
இது குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறியது:
"தமிழ் வழி படிப்புகளில் சேருவதற்கு தனியாக கலந்தாய்வு நடத்தப்படாது. பொதுவாக நடத்தப்படும் பி.இ. கலந்தாய்வில் தமிழ் வழி இடங்களும் சேர்த்து நிரப்பப்படும். அதாவது, கலந்தாய்வுக்கு வரும் மாணவரிடம் கல்லூரிகளில் வழக்கமாக உள்ள பி.இ. இடங்கள் பற்றி சொல்லப்படுவது போல், தமிழ் வழி பி.இ. படிப்பு உள்ள கல்லூரிகள் பற்றியும் அவர்களுக்குத் தெரிவிக்கப்படும். ÷அந்த மாணவருக்கு எந்தக் கல்லூரியில் இடம் வேண்டுமோ அதை அவர் தேர்வு செய்து கொள்ளலாம்' என்றார். பி.இ. கலந்தாய்வு ஜூன் 28-ல் தொடங்கி ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக