விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.விருத்தாசலம் சித்தலூர் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 30 சென்ட் நிலம் உள்ளது. இதை வழக்கறிஞர் கிருஷ்ண கதிரவன், குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 12-ம் தேதி சித்தலூர் காலனியைச் சேர்ந்தவர்கள் இந்த இடம் கோயிலுக்குச் சொந்தமான இடம் எனக் கூறி 17 குடிசைகளை அமைத்தனர். தகவல் அறிந்த கிருஷ்ண கதிரவன் மற்றும் அவரது ஆள்கள் ஞாயிற்றுக்கிழமை காலை குடிசைகளை தீ வைத்து எரித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இருதரப்பினரும் மோதிக் கொண்டதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜசேகரன் உள்ளிட்ட அலுவலர்கள் நிகழ்விடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
பின்னர், போலீசார் வழக்கறிஞர் கிருஷ்ணகதிரவன், சங்கரநாராயணன் மற்றும் கோவிந்தராசு ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.இதைத் தொடர்ந்து வழக்கறிஞர் கிருஷ்ணகதிரவன் கைது செய்யப்பட்டதை அறிந்த வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், விஜயகுமார், ரங்கநாதன், இளங்கோவன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், மோதலில் இரு தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.அந்த தரப்பினர் தாக்கியதில் வழக்கறிஞர் கிருஷ்ணகதிரவன் உள்பட பலர் காயமடைந்துள்ளனர். எனவே அவர்கள் தரப்பிலும் வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் எனக் கூறி காவல் நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், வட்டாட்சியர் ஜெயராமன், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜசேகரன் உள்ளிட்டோர் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மற்றொரு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் கூறியதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் மறியலை கைவிட்டு சென்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக