பண்ருட்டி:
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பாடநூல்கள் பண்ருட்டி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட மூட்டைகள் பாதுகாப்பின்றி கேட்பாரற்று கிடந்ததால், அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. தமிழக அரசு கடந்த பல ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாகப் பாடநூல்களை வழங்கி வருகிறது. தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவகம் அளிக்கும் தேவை குறியீட்டின் படி பாடநூல்கள் அனுப்பி வைக்கும். பின்னர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து தேவைக்கேற்ப உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு பின்னர் அதை சுற்றியுள்ள அரசுப் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும்.
இந்நிலையில் பண்ருட்டி உதவித் தொடக்கக் கல்வி அலுவலக கட்டடத்தின் பின் பகுதியில் பாதுகாப்பற்று கேட்பாரின்றி 10-க்கும் மேற்பட்ட மூட்டைகள் கொண்ட பாடநூல்கள் கிடப்பது ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பாடப் புத்தகங்கள் அனைத்தும் நடப்பாண்டில் நடைமுறையில் உள்ளவை என கூறப்படுகிறது.
இது குறித்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அறிவழகனை, தொலைபேசி மூலம் கேட்டதற்கு,
"குடோனை சுத்தம் செய்யும் போது ஒதுக்கியது' என கூறினார். மேற்கொண்டு கேட்டதற்கு "கூடுதல் உதவி கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தியிடம் கேட்டுக் கொள்ளுங்கள்' என அலைபேசியை கொடுத்துவிட்டார்.
இது குறித்து சுந்தரமூர்த்தியிடம் கேட்டதற்கு "
எனக்கு ஏதும் தெரியாது' என கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.
பின்னர் இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலர் ஜீவானந்தத்தை தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவர் கூறியது:
கடந்த இரு ஆண்டுகளாக (2009-2010, 2010-2011) மாவட்ட அலுவலகத்தில் இருந்தே நேரிடையாக சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு அஞ்சல் துறை மூலம் பாடப் புத்தகம் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது வெளியில் கிடந்த புத்தகம் 2008-2009-ம் ஆண்டு அல்லது அதற்கு முந்தைய ஆண்டை சேர்ந்ததாக இருக்க வேண்டும். உதவித் தொடக்கக் கல்வி அலுவலக ஊழியர்கள் பாடநூல் பதிவேட்டை முறையாக பராமரிக்காததால் தேவைக்கு அதிகமான புத்தகங்கள் தேங்கிய இருப்பாக இருக்கும். இந்த அலுவலகத்தின் முன் பகுதியில் புத்தகம் வைக்கும் குடோன் இருக்கும் போது வெளியில் போட வேண்டிய அவசியம் இல்லை. இந்த புத்தகங்கள் நடப்பாண்டுக்கும் பயன்படுபவை. அதிகாரிகளின் பொறுப்பற்ற நடவடிக்கையால் மதிப்பு மிக்க பாடப் புத்தகங்கள் வீணாவதாக வேதனையுடன் ஜீவானந்தம் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக