உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 21, 2010

மலேசியா சிறையில் உள்ள தாயை மீட்கக்கோரி பட்டதாரி பெண்கள் எம்.பி.,யிடம் மனு

கடலூர் : 

             மலேசியா சிறையில் உள்ள தாயை மீட்டுத்தரக்கோரி பட்டதாரி பெண் கள் எம்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தனர். கடலூர் குண்டு உப்பலவாடியைச் சேர்ந்த பட்டதாரி பெண்கள் கலைச் செல்வி (20), புஷ்பலதா (18). இருவரும் மலேசியாவில் சிறையில் உள்ள தனது தாயை மீட்கக் கோரி எஸ்.பி.,அலுவலகத்திற்கு மனு கொடுக்கச் சென்றனர். மனுவின் மீது கலெக்டர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனிப்பிரிவு இன்ஸ் பெக்டர் கூறியதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் சென்றனர். அங்கு கலெக்டர் இல்லாததால் நேர்முக உதவியாளரிடம் கொடுத்தனர்.

             மேலும் இதுகுறித்து எம்.பி.,யிடம் முறையிட சென்றனர். அங்கு எம்.பி.,யும் இல்லாததால் காங்.,செய்தி தொடர்பாளர் குமாரிடம் மனு கொடுத்தனர்.

அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

                  எங்கள் தாயார் லட்சுமி. கணவனால் கைவிடப்பட்டவர். எங்களை படிக்க வைப்பதற்காக கடந்த 2008ம் ஆண்டு ஜன. 15ம் தேதி வசந்தராயன்பாளையம் அம்சா என்பவர் மூலம் வீட்டு வேலைக்காக மலேசியா சென்றார். கடந்த ஆறு மாதமாக பணம் அனுப்பவில்லை. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது "எனக்கு சம்பளம் தரவில்லை. 20 மாத விசாவிற்கு பதில் மூன்று மாத டூரிஸ்ட் விசாவில் அனுப்பப்பட்டுள்ளேன்' என்றார்.

                        இது குறித்து அம்சாவிடம் கேட்டதற்கு, "எனக்கு தெரியாது, ஏஜன்டிடம் கேளுங்கள்' என்றார். அவரிடம் கேட்டபோது, "வேலைக்கு அனுப்பி வைப்பதுதான் என் வேலை வேறு எதுவும் தெரியாது' என கூறி விட்டார்.இதற்கிடையில் மதுரையைச் சேர்ந்த பானு என்பவர் எங்களிடம் போனில் தொடர்பு கொண்டு "உங்கள் தாய் லட்சுமி மலேசியாவில் சிறையில் உள்ளார். நானும் அவருடன் சிறையில் இருந்தேன். பிறகு மதுரை வந்தேன். உங்கள் அம்மாவிடம் பாஸ்போர்ட் இல்லை. நான் சொல்லும் நபரிடம் பணம் கட்டினால் உங்கள் தாயை இந்தியாவிற்கு கொண்டு வரமுடியும்' என்றார்.

                எங்கள் தாயார் ஒரு நாள் போனில் தொடர்பு கொண்டு "நான் பாஸ் போர்ட் இல்லாததால் சிறையில் இருக்கிறேன். நீங்கள் டிக்கெட் மற்றும் பாஸ்போர்ட் நகல் ஆகியவற்றை என் பேக்ஸ் எண்ணிற்கு அனுப்பினால் இந்தியாவிற்கு வந்து விடுவேன்' என கூறினார். அதன்படி ஏப். 26ம் தேதி அனைத்தையும் நகல் எடுத்து அனுப்பினோம்.

                       மேலும் மதுரை பானு தொடர்பு கொண்டு "மலேசியாவில் பணிபுரியும் அசோக்வர்மனுக்கு 25 ஆயிரம் ரூபாய் அனுப்பினால் உங்கள் தாயை இந்தியாவிற்கு அழைத்து வரலாம்' என்றார். நாங்களும் அவர் கூறியபடி அசோக்வர்மன் வங்கிக் கணக்கிற்கு மே மாதம் 17ம் தேதி 10 ஆயிரம் ரூபாயும், 22ம் தேதி 5,000 ரூபாயும் அனுப்பி வைத்து அசோக் வர்மனிடம் பேசினோம். இரண்டு வாரங்களுக்குள் உங்கள் தாயாரை அனுப்பி வைக்கிறேன் என்றார். ஆனால் ஒரு மாதமாகியும் வரவில்லை. மேலும் அவர் மொபைல் எண் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எங்கள் தாயாருக்கு என்ன ஆனது என தெரியவில்லை. இதுகுறித்து தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior