உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 21, 2010

திருவதிகை கோயில் வலம்புரி சங்கு


திருச்சிராப்பள்ளி உடையாரால் தானமாக வழங்கப்பட்ட வலம்புரிச் சங்கு (கோப்புப்படம்).
பண்ருட்டி:

              நமது நாட்டில் உள்ள இந்து ஆலயங்களில் காலமுறைப்படி நெய்வேதியம் நடைபெற அரசர்கள், செல்வந்தர்கள் உள்ளிட்ட பலர் பொன் பொருள்களையும், நிலங்களையும் தானமாக அளித்துள்ள செய்தி இன்று கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது.

             இந்த வகையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் திருவதிகையில் உள்ள ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயிலுக்கு திருச்சியை சேர்ந்த ஒருவர் வலம்புரிச் சங்கை கொடையாக அளித்துள்ளார். அந்த சங்கில் திருச்சிராப்பள்ளி உடையார் என பொறிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் கூறியது:

              சங்க இலக்கியங்கள் முதற்கொண்டு சமீபத்திய இலக்கியங்கள் வரை சங்குகள் போற்றப்பட்டு வருகின்றன. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்கிற முதுமொழியைப்போல, சங்கு இருந்தாலும், இறந்தாலும் வாழுகின்ற உயிராக இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. சங்கை பாடாத புலவர்களும், கவிஞர்களும் இருக்கவே முடியாது. அழகு மங்கையரின் கழுத்தை வலம்புரிச் சங்குக்கு உவமையாகக் கூறுவார்கள். காதல்-மோதல் முதற்கொண்டு சாதல்-கரும காரியங்கள் முடியவும் வரை மக்களோடு மக்களாக பின்னிப் பிணைந்திருக்கின்ற உயர்ந்தப் பொருள் சங்கு. கீதை சொன்ன கண்ணபிரான் முதல் நாட்டை ஆண்ட மன்னர்கள் வரை போருக்கு சென்ற போது முழங்கியது சங்கநாதம்தான். வெற்றிக்கும், தோல்விக்கும் சங்கே முழங்கும். திருமால் கை தாங்கிய ஆயுதங்களில் சங்குதான் முதன்மையானது. சங்குகளால்தான் கோயில்களில் சிவபெருமானுக்கு 108, 1008 சங்காபிஷேகம் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

                  தங்கம், வெள்ளி போன்ற ஆபரண உலோகப் பொருள்கள் கண்டுபிடிக்கப்படாத அன்றைய காலத்தில், நமது முன்னோர்கள் யானைத் தந்தங்களையும், சங்குகளையும் விதவிதமாக அறுத்து அணி மணிகளாக்கிச் சூட்டிக் கொண்டனர் என்பது வரலாற்று உண்மை. காரணம் இந்த இரண்டுமே சுட்டாலும் வெண்மை தருகின்ற பொருள்கள் என்பதால். திருவதிகைத் திருத்தலத்து வீரட்டானேஸ்வரருக்காக பல்வேறு தானங்கள் வழங்கப்பட்டுள்ளன. இக்கோயில் தோன்றிய காலம் தொட்டு பல்வேறு அரசர்களும், அமைச்சர்களும், அதிகாரிகளும், செல்வந்தர்களும் கொடை கொடுத்துள்ளனர். அவர்களுடைய பெயர்கள் இன்றும் கல்வெட்டில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.  தங்கம், வெள்ளி ஆபரணங்கள், அவற்றால் உருவாக்கப்பட்ட அபிஷேகப் பாத்திரங்கள், நவரத்தினங்கள் இழைத்த அணிமணிகள், நன்செய், புன்செய் நிலங்கள், நந்தவனங்கள், தோப்புகள் போன்றவற்றையெல்லாம் கொடையாகப் பெற்ற திருவதிகை சிவபெருமானுக்கு யாரோ ஒருவர் ஓர் வலம்புரிச் சங்கை கொடையாக அளித்திருக்கிறார். 

               அவர் பெயர் திருச்சிராப்பள்ளி உடையார் என்று அந்த சங்கிலேயே பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு உடையார் என்பது சாதியல்ல, திருச்சிராப்பள்ளியை ஊராக உடையவர் என்கிற பொருளாகும். சங்கின் மேலுள்ள எழுத்தமைவு கி.பி.14-ம் நூற்றாண்டை சேர்ந்தது. 600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அரசு அதிகாரியோ அல்லது பெருஞ்செல்வந்தரோ இச்சங்கை அளித்திருக்க வேண்டும். ஆனால் வெறுமனே சங்கை மட்டும் அளித்திருக்க முடியாது. இறைவனின் பஞ்சலோகத் திருமேனிகளை செய்துக் கொடுத்து, அவற்றுக்கு அபிஷேகம் செய்வதற்காக இந்த சங்கையும் உடன் கொடுத்திருக்க வேண்டும். இது சிதம்பரம் ரகசியம் இல்லை என்றாலும் வரலாற்று ரகசியம் தான் என கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior