கடலூர்:
மேட்டூர் அணை திறப்பதில் தாமதமாகியுள்ளதால், தமிழகத்தின் நெல் தேவையில் பெரும்பகுதியைப் பூர்த்தி செய்யும் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளின் 16 லட்சம் ஏக்கர் நெல் உற்பத்தி, தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
பாசனத்துக்கு மேட்டூர் அணையை திறந்த பின்னர்தான், இந்த 16 லட்சம் ஏக்கரிலும் வேளாண் பணிகளே தொடங்கும். 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை டெல்டா பாசனப் பகுதிகளில் சம்பா நெல் ரகங்கள் என்றால் 6 மாதப் பயிர்கள்தான். அப்போது பயிரிடப்பட்டு வந்த குதிரைவாலி, கொத்தமல்லி, கட்டச்சம்பா, அம்பாசமுத்திரம், வெள்ளந்தாங்கி, கோவைச்சம்பா போன்ற நீண்டகால சம்பா நெல் ரகங்கள் இன்று காணாமல் போய்விட்டன.
அவற்றின் விதைநெல் இன்று எங்கும் தேடினாலும் கிடைக்காத பொருளாகி விட்டது. அவற்றுக்கு மாற்றாக இன்று, டெல்டா பாசனப் பகுதிகளில் பொன்மணி, பிபிடி, சி.ஆர்.1009, வெள்ளைப் பொன்னி, ஏடிடி 38,39, 43, 45 ரகங்கள், கோ 43, கோ 50 போன்ற 120 முதல் 140 நாள்களுக்குள் அறுவடைக்குத் தயாராகும் குறுகியகால நெல் ரகங்கள்தான் சாகுபடி செய்யப்படுகின்றன. பூச்சி, பூஞ்சாணங்களின் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காப்பாற்ற நிறைய பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன்.
இந்த ரக அரிசியை வேறுவழியின்றிச் சாப்பிடுவோருக்கு, அவற்றில் இருந்து கிடைக்கும் சத்தும் குறைவுதான் என்றும் அவர் கூறுகிறார். நீண்டகால ரக சம்பா அரிசியை சமைத்தால் சாதம் நீண்ட நேரம் கெட்டுப் போகாது. தண்ணீர் ஊற்றி வைத்தால் தற்போதைய சம்பா அரிசிகளைப் போல் நாற்றம் அடிக்காமலும் கெட்டுப் போகாமலும் இருக்கும்.நீண்டகால ரக சம்பா நெல்லில், மாடுகள் விரும்பிச் சாப்பிடும் வைக்கோல் அதிகமாகக் கிடைக்கும். குறுகிய காலத்தில், அதிகமான ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சம்பா அரிசியைச் சாப்பிடுவதால்தான் மக்களுக்கு ஏராளமான நோய்கள் வருகின்றன என்றார்.
மேட்டூர் அணை திறக்கப்பட்டால் கொள்ளிடம் கீழணைக்கு (கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளுக்கு) தண்ணீர் வந்து சேர 20 நாள்கள் ஆகும்.அதன்பிறகு சம்பா சாகுபடிப் பணிகளைத் தொடங்கினால், அக்டோபர் 20-ம் தேதிதான் நடவுப் பணிகள் முடிவடையும். பயிர்கள் பிப்ரவரி 20-ம் தேதிக்கு மேல்தான் அறுவடைக்குத் தயாராகும். ஆனால் மேட்டூர் அணையோ ஜனவரி 28-ம் தேதி மூடப்பட்டு விடும் என்கிறார்கள் விவசாயிகள். காவிரி நதிநீர்ப் பிரச்னை தமிழக சம்பா நெல் விவசாயத்தையும், அதன்முலம் கிடைக்கும் அரிசியைச் சாப்பிடும் தமிழக மக்களின் உடல் நலத்தையும் தலைகீழாக மாற்றிவிட்டது என்கிறார்கள் டெல்டா விவசாயிகள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக