பண்ருட்டி:
பண்ருட்டி பஜாரில் இயங்கி வந்த கிளை தபால் நிலையத்தை முன் அறிவிப்பின்றி மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் வியாபாரிகளும், பொது மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வியாபார முக்கியத்துவம் வாய்ந்த பண்ருட்டி நகரின் மையப் பகுதியில் வ.உ.சி. தெருவில் உள்ள நாராயணா வணிக வளாகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கிளை தபால் நிலையம் இயங்கி வருகிறது. சிறந்த முறையில் இயங்கி வரும் இந்த தபால் அலுவலகத்தை மூடுவதற்கான உத்தரவு சனிக்கிழமை வழங்கப்பட்டது. இந்த உத்தரவை கடலூர் அஞ்சல் துறை மேற்பார்வையாளர் வழங்கியுள்ளதாக தெரிகிறது. ஆணையின்படி பஜார் தபால் நிலையத்தை மூடி கணக்குகளை பண்ருட்டி தலைமை தபால் அலுவலகத்தில் ஒப்படைக்கும் படி பஜார் தபால் நிலைய அதிகாரி கலியமூர்த்தியிடம், அஞ்சல் துறை ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் கூறினார். இத்தகவலை அறிந்த வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள்:
சுரேஷ் (நகை கடை உரிமையாளர் சங்க தலைவர்):
சிறப்பாக இயங்கி வரும் கிளை தபால் நிலையத்தை முன் அறிவிப்பின்றி மூடுகின்றனர். இது குறித்து அஞ்சல் துறை ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை கேட்டதற்கு எனக்கும் இதற்கும் சம்மதம் இல்லை என கூறிவிட்டார்.
ச.ராஜேந்திரன் (அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் சம்மேüன செயல் செயலர்):
வியாபார நிறுவனங்கள் நிறைந்துள்ள பகுதியில் உள்ள இந்த கிளை தபால் நிலையம் சிறப்பாக இயங்கி வருகிறது. நவீனமயமாக்கல் என்ற பெயரில் துணை தபால் நிலையத்தை மூட அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பண்ருட்டி பஜார் தபால் நிலையத்தை மூடுவது முதல் படி. வேண்டுமென்றால் மேலும் 500 கணக்குகளை இந்த தபால் நிலையத்தில் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம். இது குறித்து அனைத்து வியாபார சங்கங்களுடன் திங்கள்கிழமை கலந்து பேசி போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என ச.ராஜேந்திரன் கூறினார்.
தங்க நகை வியாபாரிகள் சங்க பொது செயலர் பி.எஸ்.ரங்கநாதன் உள்ளிட்ட அனைத்து வியாபார சங்கங்களின் பிரதிநிதிகள் உடனிருந்தனர். கடலூர் மாவட்ட மோட்டார் வாகனத் தலைவர் இ.ஸ்ரீதர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிறுவர் எழுச்சி பாசறை ஒன்றியச் செயலர் ஏ.பிரகாஷ் ஆகியோரும் பஜார் தபால் நிலையம் மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக