பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் அண்ணா சிலையை மறைத்து சுற்றிலும் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள். (கோப்பு படம்).
பண்ருட்டி:
பண்ருட்டியில் காமராஜர் அண்ணா சிலைகளை மறைத்து விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
பண்ருட்டி நகர நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்தாலும் உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது.பண்ருட்டி பஸ் நிலையம் முகப்பில் உள்ள காமராஜரின் சிலையைச் சுற்றிலும் பாதுகாப்பு இல்லாததால் மண்டபத்தை முதியவர்கள் ஓய்வு எடுக்கவும், சிறார்கள் ஏறி விளையாடவும் செய்கின்றனர்.இதைச் சுற்றியுள்ள கம்பி வேலிகளில் நாளிழ்கள் மற்றும் பருவ இதழ்களின் போஸ்டர்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் கொட்டும் இடமாகவும், வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் மாறியுள்ளது.
இதேபோல் நான்கு முனை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை மண்டபத்தை வியாபாரிகள் பொருள்களை வைக்கவும், ஓய்வு எடுக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.இவ்விரு தலைவர்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடும் இடம். இதனால் சிலர் மருத்துவ முகாம், பள்ளி மற்றும் கல்லூரி விளம்பரம், மரண அறிவிப்பு, வாழ்த்து, செய்தித்தாள், வார இதழ்கள் போஸ்டர்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்பு மற்றும் விளம்பரத் தட்டிகள், பேனர்களை வைக்கும் இடமாக மாற்றி உள்ளனர்.பெரும்பாலான விளம்பரத் தட்டிகள், பேனர்கள் அனுமதி பெறப்படாமல் வைக்கப்படுகிறது.
இவ்வாறு வைக்கப்படும் விளம்பரத் தட்டிகள் தலைவர்களின் சிலைகளை மறைக்கின்றன.மேற்கண்ட இடத்தில் விளம்பரத் தட்டிகளை வைக்கக் கூடாது என்றும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள நகர நிர்வாகமே நகராட்சி தொடர்பான விளம்பரங்களை, தலைவர்களின் சிலைக்கு முன்னால்தான் வைக்கிறது.மேலும் சிலைக்கு முன்னர் உள்ள இடத்தில் அழகுக்காக அமைக்கப்பட்ட செயற்கை நீரூற்று, முறையாக பராமரிக்கப்படாததால் குப்பைகள் சேர்ந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
சுகாதாரச் சீர்கேடு, விபத்துகளை ஏற்படுத்தும் இத்தகைய விளம்பரங்கள் வைப்பதை நகர நிர்வாகமும், காவல்துறை அதிகாரிகளும் கண்டுக்கொள்ளவில்லை.காமராஜர், அண்ணா ஆகியோரை சொந்தம் கொண்டாடும் கட்சியினர்கூட தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் தேர்தல் நேரம் மற்றும் தேர்தல் வெற்றி போன்ற நேரத்தில் மட்டும் ஒரு மாலை வாங்கி சூட்டி போட்டோவுக்கு போஸ் கொடுப்பதுடன் சரி மேற்கொண்டு எதையும் கண்டுக்கொள்வதில்லை. சிலையை மறைக்கும் வகையில் வைக்கப்படும் விளம்பர பேனர்கள் அமைப்பதை தடை செய்ய நகர நிர்வாகமும், காவல்துறையும் முன் வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக