உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 26, 2010

மீண்டும் போராட்டத்துக்கு தயாராகும் என்எல்சி தொழிலாளர்கள்

நெய்வேலி:

              வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கும் காலாண்டு ஊக்க ஊதியம் வழங்க வலியுறுத்தி என்எல்சி தொழிலாளர்கள் மீண்டும் போராட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

           புதிய ஊதியமாற்று ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி என்எல்சி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்படாத தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் ஜூன் 2-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் போராட்டம் மேற்கொண்டனர். இதையடுத்து நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்கத்தினர் ஜூன் 30 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும், நிர்வாகத்துக்கும் இடையே ஜூலை 5-ம் தேதி ஏற்பட்ட ஊதியமாற்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவாக காலவரையற்ற போராட்டம் ஜூலை 5-ம் தேதி இரவு முடிவுக்கு வந்ததையடுத்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர்.

          இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் அனைத்து ஊழியர்களுக்கும் 2-வது காலண்டிற்கான ஊக்க ஊதியம் வழங்கப்படும். அதன்படி சனிக்கிழமை ஊக்க ஊதியம் வழங்குவதற்கான ஆணையை நிர்வாகம் பிறப்பித்தது. இதைக் கண்ட தொழிலாளர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். அந்த ஆணையில், ""அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத தொழிற்சங்கங்கள் ஜூன் 2 மற்றும் 30-ம் தேதி நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காலாண்டு ஊக்க ஊதியம் பெற தகுதியற்றவர்கள்'' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்மூலம் சுமார் 4 ஆயிரம் பேர் ஊக்க ஊதியம் பெற முடியாத நிலை ஏற்படும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தினர் ஜூலை மாதமும் போராட்டத்தை தொடர்ந்ததால் 3-வது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) அனைத்து ஊழியர்களுக்கும் ஊக்க ஊதியம் கிடைக்க வாய்ப்பில்லாமல் போகும். இதையடுத்து தொழிற்சங்கங்கள் மீண்டும் போராட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். 

             அதன்படி ஜூலை 26, 27 தேதிகளில் விதிப்படி வேலை என்ற போராட்டமும், 28-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெறும் என நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். அங்கீகரிக்கப்படாத தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை என்எல்சி தலைமை அலுவலகம் நோக்கி பேரணியும் நடத்தவுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior