கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 2009-10-ம் ஆண்டில் மட்டும், ரூ.209.29 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் சனிக்கிழமை தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம், கடலூரில் சனிக்கிழமை நடந்தது. மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் அவினாசி எஸ்.இ.எம். கார்மெண்ட் நிறுவனம் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
முகாமைத் தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பேசியது:
முகாமில் 400-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களில் வேலை செய்ய விருப்பம் தெரிவித்த 50-க்கும் மேற்பட்டோர் வேலைக்குத் தேர்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு மாத ஊதியம் ஆண்களுக்கு ரூ.4,500-ம் பெண்களுக்கு ரூ.3,250 வழங்கப்படும். உணவுக்காக ஆண்களிடம் ரூ.800-ம் பெண்களிடம் ரூ.600-ம் பிடித்தம் செய்யப்படும். தங்கும் இடம் இலவசம். தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு வரும் வாரத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பணி ஆணை வழங்குவார்.
கடந்த ஓராண்டில் மற்ற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு கடலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. வாரம்தோறும் நடைபெறும் மக்கள் குறைகேட்கும் கூட்டங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனிப்பிரிவு, தனி வழி அமைத்து, அவர்களின் கோரிக்கைகளுக்கு ஒரு வாரத்தில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 362 பேருக்கு வயது வரம்பை தளர்த்தி உதவித் தொகைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் புதிய திட்டத்தில் 1541 பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. ஓராண்டில் 3,985 பேருக்கு ரூ.12.06 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் மற்றும் ரூ.1.74 கோடி நிதி உதவி, தனிநபர் பொருளாதார நிதி உதவியாக ரூ.1.86 கோடி வழங்கப்பட்டது. 29,215 பேருக்கு தேசிய அடையாள அட்டையும், மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் 9,812 பேருக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. தேசிய அறக்கட்டளை மூலம் 434 நபர்களுக்கு ரூ.10.45 கோடி மதிப்பில் மருத்துவக்காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் பல உதவிகள் செய்யப்பட்டு உள்ளன. மொத்தத்தில் கடந்த ஓராண்டில் ரூ. 209.29 கோடிக்கான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளன. ÷நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், எஸ்.இ.எம். கார்மெண்ட் நிறுவன மேலாளர் யோகமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக