உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 26, 2010

விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் ஜப்தி நடவடிக்கை ஆகஸ்ட் 5 வரை கெடு விதிப்பு

விருத்தாசலம்:

            விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் நிலுவைத் தொகை செலுத்தாததால், வட்டாட்சியர் தலைமையில் சனிக்கிழமை செராமிக் தொழில் பேட்டையில் ஜப்தி செய்ய சென்றனர்.

            விருத்தாசலம் ஆலடி சாலையில் செராமிக் தொழிற்பேட்டை இயங்கி வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட தனிநபர்கள் தற்போது பீங்கான் தயாரிப்புப் பணியை செய்துவருகின்றனர். இதற்கான மூலப் பொருள்களை அரசு செராமிக் நிறுவனத்திடம் வாங்கி தொழில் செய்கின்றனர்.இந்நிலையில் கடந்த 1995-ம் ஆண்டு மூலப் பொருள்களின் விலையையும், சுடு கட்டணத்தையும் அரசு உயர்த்தியது. இந்த விலை உயர்வை எதிர்த்து பீங்கான் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் அரசுக்கு சாதகமாக நீதிமன்றம் கடந்த 1999-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

             பீங்கான் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் விலை உயர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்த நாள் முதல், தீர்ப்பு வெளியான ஆண்டு வரை உள்ள இடைப்பட்ட காலத்தில், பீங்கான் மூலப்பொருள் விலையை கட்டவில்லை. இந்நிலையில் நிலுவைத் தொகையை செராமிக் நிர்வாகம் பலமுறை வசூல் செய்ய முயன்றும் முடியவில்லை. இதனைத் தொடர்ந்து செராமிக் நிறுவனத்தினர் வருவாய்த் துறையினரிடம் நிலுவைத் தொகையை வசூல் செய்து தருமாறு கேட்டுக்கொண்டனர். இதனடிப்படையில் கோட்டாட்சியர் மற்றும் வருவாய் வட்டாட்சியர் ஆகியோர் பீங்கான் உற்பத்தியாளர்களை அழைத்து செராமிக் நிறுவனத்துக்கு கட்ட வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக கட்ட வேண்டும் என்றும், அவ்வாறு கட்டத் தவறினால் பொருள்கள் ஜப்தி செய்யப்படும் என தெரிவித்தனர். 

              இதற்கு பீங்கான் உற்பத்தியாளர்கள் எங்களுக்கு காலக்கெடு கேட்டதால், அரசு அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் வரை காலக்கெடு வழங்கினர். ஆனால் இதுவரையிலும் பீங்கான் உற்பத்தியாளர்கள் நிலுவைத் தொகையை செலுத்தவில்லை.எனவே சனிக்கிழமை (ஜூலை 24) வட்டாட்சியர் ஜெயராமன் தலைமையில் செராமிக் தொழிற்பேட்டைக்கு பொருள்களை ஜப்தி செய்ய சென்றனர். 

              அப்போது பீங்கான் உற்பத்தியாளர்கள், "எங்களுக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கினால் நாங்கள் நிலுவைத் தொகையை கட்டிவிடுவோம்' எனக் கூறினர். இதற்கு வட்டாட்சியர் ஜெயராமன் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் கட்டாயம் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்து, ஜப்தி நடவடிக்கையை தாற்காலிகமாக கைவிட்டார்.இந்த ஜப்தி முயற்சியால் செராமிக் தொழிற்பேட்டையில் பரபரப்பான நிலை காணப்பட்டது. ஆய்வாளர் சீராளன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior