உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 13, 2010

2013 - ல் ஆளில்லா விண்கலம் செலுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தகவல்


 
         ஆளில்லா விண்கலம் 2013-ம் ஆண்டில் விண்வெளிக்கு அனுப்பப்படும் என்று இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
 
              விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் முதற்கட்டமாக ஆளில்லா விண்கலம் அனுப்பப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவிததார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. -சி15 ராக்கெட் 5 செயற்கைக்கோள்களுடன் திங்கள்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 
 
அதன்பிறகு இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், இஸ்ரோ விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் அலெக்ஸ், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குநர் வீரராகவன், பி.எஸ்.எல்.வி. திட்ட இயக்குநர் உன்னி கிருஷ்ணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் கூறியது:
 
                   விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதற்கான முன்னோட்டமாக இந்த ஆளில்லா விண்கலம் 2013-ம் ஆண்டில் அனுப்பப்படும். பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் அனுப்பப்படும் இந்த விண்கலம், பூமியை 7 நாள்களுக்குச் சுற்றி வரும். மனிதர்கள் விண்வெளியில் தங்குவதற்கு தேவையான சுற்றுப்புறச் சூழல், அவர்களைத் தாக்கும் கதிர்வீச்சு ஆகியவை குறித்து இந்த கலத்தின் மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.முக்கியமாக, இந்த ஓடத்தை பூமியில் பத்திரமாக இறக்குவதற்கான தொழில்நுட்பம் பொருத்தப்படும். விண்வெளிக்கு மனிதன் எப்போது?விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக, ஸ்ரீஹரிகோட்டாவில் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள் ரூ.1000 கோடியில் மேற்கொள்ளப்படும். விண்கலத்தை அனுப்புவதற்காக 3-வது ஏவுதளம் அமைத்தல், விண்வெளி வீரர்களை உருவாக்குவதற்கான பயிற்சி மையங்களை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும். 
 
                இவை அனைத்தும் உருவாக்கப்பட்ட பிறகு விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு எந்தக் காலக்கெடுவையும் குறிப்பிட முடியாது.சந்திரயான்-2÷சந்திரயான் -2 விண்கலம் வரும் 2013-ம் ஆண்டு செலுத்தப்படும். நிலவில் பத்திரமாக தரையிறங்குவது, நிலவில் சுற்றி தகவல்களைச் சேகரிப்பது ஆகிய அம்சங்கள் இதில் மேம்படுத்தப்படும். செப்டம்பரில் அடுத்த ராக்கெட்டுகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஜி.எஸ்.எல்.வி. -எப்06 ராக்கெட்டும், பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட்டும் ஏவப்பட உள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகள் உடனடியாகத் தொடங்கும். ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் ஜிசாட் 5-பி என்ற நவீன தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது. இந்தச் செயற்கைக்கோள் முக்கியமாக தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்.
 
               பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் செலுத்தப்படும் ரிசோர்ஸ்சாட்-2 என்ற செயற்கைக் கோள் விவசாயத் துறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரிசோர்ஸ்சாட்-1 செயற்கைக்கோளுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து இந்தச் செயற்கைக்கோள் செலுத்தப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.புனித தலங்களைப் படம் பிடிக்கிறது கார்ட்டோசாட்பி.எஸ்.எல்.வி.-சி15 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட கார்ட்டோசாட்-2 பி செயற்கைக்கோள் செவ்வாய்க்கிழமை முதல் பூமியைச் சுற்றி படம் எடுக்கத் தொடங்கும்.அவ்வாறு பூமியைச் சுற்றும்போது வாராணசி, நாகபுரி, திருப்பதி, மதுரை உள்ளிட்ட புனித தலங்களைப் படம் பிடித்து அனுப்ப உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
                 சுமார் 630 கி.மீ. உயரத்திலிருந்து சக்திவாய்ந்த கேமரா மூலம் படம் எடுக்கப்படுவதால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் கூட மிகத் துல்லியமாக தெரியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.இந்த கேமரா மூலம் ஒரே நேரத்தில் 10 கிலோ மீட்டர் பரப்பளவு வரை படம் பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி.-சி15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதைக் கொண்டாடும் வகையில் அதன் மாதிரியுடன் (இடமிருந்து) விஞ்ஞானி ராமகிருஷ்ணன், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத் தலைவர் பி.எஸ். வீரராகவன், இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத் தலைவர் டி.கே. அலெக்ஸ், ஹைதராபாதில் உள்ள தேசிய தொலையுணர்வு மையத்தின் இயக்குநர் ஜெயராமன்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior