வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட ஒரு தனியார் கல்லூரியைச் சேர்ந்த இறுதியாண்டு மாணவர்களின் 229 விடைத் தாள்கள் காணாமல் போயிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 85 கலை அறிவியல் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகள் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றன. இதில், ஆர்க்காடு மஹாலட்சுமி கல்லூரியில் மே 13-ம் தேதி நடந்த தேர்வில் மொத்தம் 1,189 மாணவ- மாணவிகள் தேர்வெழுதினர். இவர்களது விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்டிருந்த, சம்பந்தப்பட்ட திருத்தும் மையங்களுக்கு மே 19-ம் தேதி அனுப்பப்பட்டன.
விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்த நிலையில், ஆர்க்காடு மஹாலட்சுமி கல்லூரியில் பிஏ.தமிழ், பிகாம், பிகாம் கம்பெனி செகரட்ரிஷிப், பிசிஏ தேர்வெழுதிய மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் குறிப்பிட்ட பாடங்களில் "விடுப்பு' எனக் குறிப்பிடப்பட்டிருந்து. மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் இவ்வாறு மதிப்பெண்கள் விடுபட்டிருப்பதை சரிபார்த்தபோது, மொத்தம் 229 மாணவர்களின் 229 விடைத்தாள்கள் காணமல் போயிருப்பது ஜூலை 10-ம் தேதி தெரியவந்தது. அண்மையில் முதுகலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், இளநிலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் தற்போதுவரை வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து பல்கலைக்கழக துணைப் பதிவாளர் ஆ. ஜோதிமுருகன் கூறியது:
விடைத்தாள்கள் தொலைந்துபோனது பற்றி தேர்வுக் கட்டுப்பாட்டாளர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு ஒரு வாரத்துக்குள் தீர்வுகாணப்படும். மேலும், விடைத்தாள்கள் தொலைந்து போன 229 மாணவ- மாணவியர்களுக்கு விரைவில் மறு தேர்வு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. போதிய நிரந்தர ஊழியர்கள் இல்லாததே இதுபோன்ற தவறுகள் நடக்கக் காரணம் எனத் தெரிகிறது. பல்கலைக்கழகத்தின் நிரந்தர ஊழியர்கள் 10 சதவீதம் பேர் மட்டுமே விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மற்றவர்கள் தாற்காலிக ஊழியர்களே. விடைத்தாள்கள் தொலைந்து போன 4 பிரிவுகளைத் தவிர, பிற இளநிலை பட்டப் படிப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 13) வெளியிடப்படும் என்றார் ஜோதிமுருகன். ஆனால், விடைத்தாள் காணாமல்போன ஆர்க்காடு மஹாலட்சுமி கல்லூரி மாணவர்கள் கடந்த ஆண்டு நடந்த தேர்வில் பிசிஏ பாடப் பிரிவில் பல்கலைக்கழக அளவில் 9-வது இடத்தைப் பிடித்தனர். அதே பாடப் பிரிவில் தற்போது விடைத்தாள்கள் காணாமல் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக