உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 13, 2010

பெயர் மாற்​றங்​கள் கண்ட பண்ணுருட்டி


பண்ணுருட்டி என எழுதப்பட்டுள்ள சிட்டா புத்தகம்.
 
பண்ருட்டி:

            கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி முக்கிய நகரமாகும். இந்நகரம் ஆன்மிகம், கலை, விவசாயம், வரலாற்று சிறப்புகளை தன்னகத்தே கொண்டு இன்று வரை உலகளவில் தனக்கென தனி முத்திரை பெற்று சிறப்பு கொண்டுள்ளது.

              பண்ருட்டி என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது பலாப்பழம். அடுத்து முந்திரி இதன் வரிசையில் காகிதம் மற்றும் மண்ணால் செய்யப்படும் கலை எழில் மிகுந்த பொம்மைகள். ஆன்மிக மணம் கமழும் திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர், ஸ்ரீ சரநாராயணப் பெருமாள், ஸ்ரீ அரங்கநாதப் பெருமாள் கோயில்கள், திலகவதியார் மற்றும் அப்பர் சுவாமிகள் பிறந்த திருவாமூர் ஆகியவையும் பண்ருட்டிக்கு தனி பெருமையை அளித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இத்தகைய புகழ்களைக் கொண்ட பண்ருட்டியின் பெயர் பல்வேறு காலகட்டங்களில் மறுவி வந்தாலும் இப்பெயர்கள் வந்ததற்கான காரணங்கள் பல கூறப்படுகின்றன.

இது குறித்து கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் கூறியது:

                 சங்க காலம் முதற்கொண்டு கடைக்காலச் சோழர்கள் மற்றும் பாண்டியர்கள்-விஜயநகர மன்னர்கள் ஆட்சிக் காலங்கள் வரை பண்ருட்டி என்கிற ஊர்ப்பெயர் எங்கும் எதிலும் காணப்படவில்லை. கி.பி.1500-க்கு பிறகு தமிழகத்தை அரசாண்ட நாயக்க மன்னர்களின் இறுதிக் காலத்தில்தான் ஏற்பட்டிருக்க வேண்டும். 

               வரலாற்றின்படி அதிராச மங்கலபுரம் என்ற தொன்மைப் பெயரை கொண்ட அதிகாபுரி பின்னர் அதிகை என பெயர் மாற்றம் கொண்டு திரு என்ற மங்கல சிறப்பு சொல்லை  இணைத்து திருஅதிகை என்றாகி தற்போது திருவதிகை என்று அழைக்கப்படுகிறது. என்றாலும் இன்றைய மக்கள் வழக்குச் சொல்லில் திருவிதி என மாறி வருகிறது. கிழக்கே திருவதிகை அணைக்கட்டு, மேற்கே புதுப்பேட்டை, தெற்கே காடாம்புலியூர், வடக்கே பஞ்சமாதேவி வரை நகர எல்லைகளாக கொண்டிருந்தது அதிராச மங்கலபுரம் என்கிற திருவதிகை மாநகரம். காலப்போக்கில் பிரிந்து புதிய பெயர்களைக் கொண்ட ஊர்களை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு தற்போது சின்னஞ்சிறிய ஊராகக் கரைந்து இளைத்து விட்டது திருவதிகை.

                என்றாலும் சங்ககால தொன்மைப் புகழையும், வரலாற்றுப் பெருமையையும் இன்னமும் இழந்துவிடவில்லை. இழக்கப்போவதுமில்லை. காரணம் சைவ சித்தாந்த ஆன்மிகச் சிறப்பைத் தாங்கி வரலாற்றுச் சின்னமாக உயர்ந்து நிற்கும் திருவதிகை ஸ்ரீ வீரட்டானமுடையார் திருக்கோயிலே ஆகும்.÷இத்தலம் முப்புரம் எரித்த புராணச் சிறப்பினை உடையது. இதையொட்டி சில ஊர் பெயர்கள் தோன்றியதாக புராணிகர்கள் கூறுவார்கள். சிவபெருமாள் திருபுரம் எரிக்க தேரில் வந்த போது தேரின் அச்சு முறிந்த (இறுத்த) இடம் அச்சிறுபாக்கம் என்றும், முப்புரம் எரிந்து சாம்பலான போது ஒரு இடம் மட்டும் வேகவில்லை. அதனால் அதற்கு வேகாக்கொல்லை என்று பெயர் பெற்றதாக செவிவழிச் செய்தி.÷புராணத்தின் அடிப்படையிலேயே அச்சு முறிந்த தேரை பாடலால் ஓட வைத்த இடம் பண்ணுருட்டி. அதாவது பண் என்பது பாடல், உருட்டி என்பது ராகம் என்ற பொருளில் பண் உருட்டி- பண்ணுருட்டி ஆனது என்று கூறுவர். 

                   ஒருசிலர் பண் உருட்டி பாடல்களைப் பாடும் பாணர் என்கிற மரபினர் வாழ்ந்த இடமாதலால் பண்ணுருட்டி என்று பெயர் பெற்றதாக கூறுவர். சிலர் மண்ணை உருட்டி பொம்மை செய்யும் தொழிலை செய்ததால் மண்ணுருட்டியே பண்ணுருட்டி ஆனது என்பர். ஆனால் இவையெல்லாம் சரியான ஆதாரங்கள் இல்லை என்பது சமீபகால ஆய்வில் நான் கண்டறிந்த உண்மையாகும். கி.பி.1500 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை அரசாண்ட நாயக்க மன்னர்களின் இறுதிக் காலங்களில்தான் பாளைய ஆட்சி முறையை அறிமுகப்படுத்தினர். பாளைய ஆட்சி முறை என்பது நகராட்சி ஆணையர், தலைவர் போன்ற பதவி அதிகாரத்தை உடையதாகும். நிர்வாக மேம்பாடு மற்றும் வரிவசூல் போன்றவற்றை பாளையக்காரர்களே செய்து வந்தனர். இவ்வாறு பிரிக்கப்பட்ட பாளையங்களே பண்ருட்டியை சுற்றியுள்ள கொண்டாரெட்டிப் பாளையம், லிங்காரெட்டிப்பாளையம், அங்குசெட்டிப்பாளையம், பக்கிரிப்பாளையம், அரிசிக்கவுண்டன்பாளையம் போன்ற ஊர்களாகும். 

                 இதைபோலவே பண்டாரெட்டிப்பாளையம் பிரிக்கப்பட்டது. இதுவே பண்டாரெட்டி என மறுவி வந்து பண்ணுருட்டி ஆகி தற்போது பண்ருட்டி என அழைக்கப்படுகிறது. இந்தப் பாளையங்கள் வீரப்பாண்டிய கட்டபொம்மன் காலம் வரை அதாவது ஆங்கிலேயர்கள் தமிழகத்தை ஆளத் தொடங்கியது வரை செயல்பட்டுக் கொண்டிருந்தன என பண்ருட்டி தமிழரசன் கூறினார்.

இது குறித்து பண்ருட்டி வட்டாட்சியர் பி.பன்னீர்செல்வத்திடம் கூறியது

                 பண்ருட்டி என்ற பெயர் வந்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவை அனைத்தும்  செவிவழி வந்த செய்திகள். இருந்தாலும் பண்டாரெட்டி என்பவரது எஸ்டேட்தான் பண்ருட்டி என பெயர் மாற்றம் பெற்று இருக்கலாம் என தெரியவருகிறது என கூறினார். என்றாலும் மறுவிவிட்ட ஊர்ப்பெயரை இனிமேல் மாற்ற முடியாது. எனவே பண்ருட்டி என்பதை விட பண்ணுருட்டி எனக் கூறப்படுவதே சாலப் பொருத்தமாகும். சில ஆண்டுகளுக்கு முன்புவரைக் கூட பண்ணுருட்டி எனத்தான் வருவாய் துறையினர் அடங்கள், ஏ ரிஜிஸ்டர்களில் எழுதி வந்துள்ளனர். இன்னமும் பண்ணுருட்டி நகராட்சி பண்ணுருட்டி எனத்தான் பயன்படுத்தி வருகிறது. இதேபோல் அனைத்து தரப்பினரும் ஆதரவளித்து ஊரின் பெயர் இனி மறுவாமல் இருக்க பண்ணுருட்டி என படிக்கவும், எழுதவும் வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் விரும்புகின்றனர். பண்ணுருட்டி என நடைமுறைக்கு வருவது சாத்தியமாகுமா?

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior