தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் தமிழ் வழியில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ் வழியில் பொறியியல் பட்டப் படிப்புகள் இந்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் மட்டும் சிவில், மெக்கானிக்கல் பிரிவுகளில் தமிழ் வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல்வர் கருணாநிதி கூறியுள்ளதுபோல், இது ஒரு தன்னிகரில்லா திட்டம். எனினும், தமிழுக்கு மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால், மாநிலத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும், அனைத்துப் பாடப் பிரிவுகளையும் தமிழ் வழியில் பயில நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அனைத்துக் கல்லூரிகளுக்கும் கட்டாய நிபந்தனையாக்க வேண்டும். தமிழ் வழி வகுப்புகளில் மாணவர்கள் பெருமளவு சேருவதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கும் திட்டம், பொறியியல் பட்டதாரிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக, மின் வாரியம், பொதுப்பணித் துறை, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ் வழியில் படித்த பொறியியல் பட்டதாரிகளுக்கு முதல் வாய்ப்பு வழங்குவதுடன், அந்தத் திட்டத்தை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிக்கும் சட்டத்தை, அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரை காத்திராமல், உடனடியாக அவசரச் சட்டமாக அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக