உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 22, 2010

கடலூர் மாவட்டத்தில் பல நூறு கோடியில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டும் வெள்ளத்தால் பரிதவிக்கும் 50 கிராமங்கள்


கொள்ளிடம் ஆறு (கோப்புபடம்).
கடலூர்:
 
             கடலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன் ஆறுகளின் கரைகளை பலப்படுத்துதல், வடிகால் வாய்க்கால்களை சீரமைத்தல் உள்ளிட்ட பல பணிகள் ரூ.200 கோடியில் நிறைவேற்றப்பட இருக்கின்றன. 
 
            பிற மாவட்டங்களில் உற்பத்தியாகி கடலூர் மாவட்டத்தில் பாயும் கொள்ளிடம் ஆறு, பெண்ணையாறு, வெள்ளாறு, பரவனாறு, கெடிலம் ஆறு ஆகியவற்றால், கடலூர் மாவட்ட வேளாண்மைக்கு பெரிதாகப் பயன்கள் இல்லை. இவைகள் வடிகாலாகச் செல்வதால், மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் கடலூர் மாவட்டத்தில் 200 கிராமங்கள் மற்றும் கடலூர், சிதம்பரம் ஆகிய நகரங்கள் பாதிக்கப்படுகின்றன.ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி விவசாயிகளின் வாழ்வாதாரங்களை ஆண்டுதோறும் அழித்து வருகின்றன.
 
             எனவே கடலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் தேவை என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்தக் கோரிக்கைகளை ஏற்று, மத்திய மாநில அரசுகள், தற்போது பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முன்வந்து இருக்கிறது.ரூ. 109 கோடியில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையைப் பலப்படுத்துதல், ரூ. 68 கோடியில் வெள்ளாற்றின் கரையைப் பலப்படுத்துதல், மத்திய பரவனாற்றை ரூ. 7 கோடியில் சீரமைத்தல், ரூ. 23 கோடியில் வீராணம் ஏரியை மராமத்து செய்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 
 
    
 
 
             நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு இருப்பதாக பொதுப்பணித்துறை தெரிவிக்கிறது.இத்தனை கோடிகளில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டும், உண்மையான வெள்ளப் பாதுகாப்புக்கு இத்திட்டங்களால் தீர்வு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வீராணத்தின் வடிகால் வெள்ளியங்கால் ஓடையில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் வெளியேற்றப்படும் அபரிமிதமான நீரால் (வினாடிக்கு 15 ஆயிரம் கன அடிக்கு மேல்) திருநாரையூர், எடையார், பிள்ளையார்தாங்கல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்படுகின்றன. 
 
            இதேபோல் வீராணத்துக்கு காவிரி நீரை விநியோகிக்கும் வடவாறில் இருந்து பிரிந்து பாசன வாய்க்காலாகவும், வடிகால் வாய்க்காலாகவும் விளங்கும் மணவாய்க்காலில், ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பெருக்கால், காட்டுமன்னார்கோவில் கருப்பூர், ஆலங்காத்தான் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களும், 1000 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைநிலங்களும் அடித்துச் செல்லப்படுகின்றன.பழைய கொள்ளிடத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால், வல்லம்படுகை, பேராம்பட்டு உள்ளிட்ட 15 கிராமங்களும், 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பாதிக்கப்படுகின்றன. 
 
            பாசிமுத்தான் ஓடையில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் சிதம்பரம் நகரம் மற்றும் 10 கிராமங்கள் ஆண்டுதோறும் பல நாள்கள், தண்ணீரில் தத்தளிக்க நேரிடுகிறது.வீராணம் ஏரி முழுக் கொள்ளளவுக்கும் நீர்மட்டம் உயரும்போது எதிர்கரையில் உள்ள சித்தமல்லி, அறந்தாங்கி உள்ளிட்ட 10 கிராமங்களில் பயிரிடப்படும் 1000 ஏக்கர் நெல், வாழை, கரும்புப் பயிர்கள் ஆண்டுதோறும் நீரில் மூழ்கி சேதம் அடைகின்றன. ஆனால் இந்த பாதிப்புகளுக்குத் தீர்வு காண, தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் திட்டங்களில் வழிகாணப்படவில்லை என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.
 
இது குறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 
 
           "ஆண்டுதோறும் கிராமத்து ஏழை, எளிய மக்களுக்கும், 50 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கும் வெள்ளப்பாதிப்பை ஏற்படுத்தும், வெள்ளியங்கால் ஓடை, மணவாய்க்கால், பழையகொள்ளிடம், பாசிமுத்தான் ஓடை, கருவாட்டு ஓடை ஆகியவற்றில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, மேற்கண்ட திட்டங்களில் அறிவிப்பு ஏதும் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.மேற்கண்ட பணிகளைச் செய்தால்தான் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை முழுமையாகப் பலன் தரும். அதற்கு ஏதாவது திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என்றார்.
 
இது குறித்து பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் செல்வராஜி கூறுகையில்
 
              "தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் திட்டங்களில் மேற்கண்ட பணிகள் எடுத்துக் கொள்ளப்படவில்லை. எனினும் அப்பணிகளைச் செய்தால்தான் மக்கள் பாதுகாப்புடன் இருக்க முடியும்.பயிர்கள் சேதத்தையும் தவிர்க்கலாம். வீராணம் எதிர்கரை பலப்படுத்தும் பணிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ வாட்டர் திட்டத்தில் அப்பணி மேற்கொள்ளப்படும்  என்று தெரிகிறது என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior