நெய்வேலி:
ஊதியமாற்று ஒப்பந்தத்தின் நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும், புதிய ஊதிய விகிதத்தின் அடிப்படையில் புதிய சம்பளம் எந்த மாதத்திலிருந்து அமலாகும் என ஏக எதிர்பார்ப்புடன் என்எல்சி தொழிலாளர்கள் ஜூலை மாத சம்பளப் பட்டியலை எதிர்நோக்கியுள்ளனர்.
ஊதியமாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி என்எல்சி தொழிலாளர்கள் ஜூன் 30 முதல் ஜூலை 5-ம் தேதி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நிர்வாகத்துக்கும், நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜூலை 5-ம் தேதி நள்ளிரவில் ஏற்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர். இருப்பினும் ஊதியமாற்று ஒப்பந்தத்தில் உள்ள ஷரத்துக்களில் புதிய ஊதிய அலகீடுகள் இணைக்கப்பட்டிருந்ததோடு, பதவி உயர்வு உள்ளிட்ட விஷயங்கள் நிலுவையில் இருந்தன. இது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் கடந்த ஒருவாரமாக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.÷இப்பேச்சுவார்த்தையில் அனைத்து ஷரத்துக்களும் பேசி முடிக்கப்பட்டு ஊதிய மாற்று ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற்றுள்ளது.
ஊதியமாற்று ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற்றதையடுத்து, புதிய ஊதிய விகிதத்தின் அடிப்படையில் ஜூலை மாதம் ஊதியம் கிடைக்குமா, ஒப்பந்தத்தின் படி நிலுவைத் தொகை எவ்வளவு, எப்போது கிடைக்கும் என்ற கேள்விகளுடன் தொழிற்சங்க அலுவலகத்தின் முன் திரள துவங்கியுள்ளனர் தொழிலாளர்கள்.
இதுதொடர்பாக என்எல்சி நிர்வாகத்துறை அதிகாரி கூறுகையில்,
ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவரவர் ஊதிய நிலைக்கேற்ப குறைந்தபட்சம் ரூ.1.25 லட்சமும், அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் வரையிலும் நிலுவைத் தொகை கிடைக்க வாய்ப்புண்டு. இந்தத் தொகையிலிருந்து ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள தாற்காலிக முன்பணம் பிடித்தம் செய்யப்பட்டு, கடைநிலைத் தொழிலாளிக்கு ரூ.70 ஆயிரம் வரையும், மூத்த தொழிலாளிக்கு ரூ.1.35 லட்சம் வரையிலும் கிடைக்க வாய்ப்புண்டு.
மேலும் மேற்கண்ட தொகைகளை வழங்க நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தின் ஒப்புதலும், மத்திய நிலக்கரித்துறை அமைச்சகத்தின் ஒப்புதலையும் பெற வேண்டியுள்ளது. எனவே இம்மாதம் 28-ம் தேதி நடக்கவுள்ள இயக்குநர்கள் குழுக் கூட்டத்தின் ஒப்புதலைப் பெற்றபின், மத்திய நிலக்கரித்துறை அமைச்சகத்தின் ஒப்புதலையும் பெற்று ஆகஸ்டு 15-க்குப் பிறகோ அல்லது செப்டம்பர் மாத சம்பளத்தின் போதோ மேற்கண்ட தொகைகள் கிடைக்க வாய்ப்புண்டு எனத் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக