கடலூர் :
மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் "பார்' நடத்துவதற்காக நேற்று நடந்த ஏலத்தில் 60 கடைகள் மட்டுமே ஏலம் போனது.
கடலூர் மாவட்டத்தில் 231 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் "பார்' நடத்தவும், அதில் கிடைக்கும் காலி பாட்டில்களை எடுத்து விற்பனை செய்வதற்கு ஓராண்டு உரிமத்திற்கான ஏலம் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதற் கான டெண்டர் கடந்த 5ம் தேதி முதல் 19ம் தேதி வரை பெறப்பட்டது.
இந்த டெண்டர் படிவங்கள் நேற்று காலை 11 மணிக்கு கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தில் மேலாளர் தேவராஜ் முன்னிலையில் பிரிக்கப்பட்டது. மொத்தம் 121 டெண்டர்கள் வந்திருந்தன. அதில் அதிகபட்ச தொகையை குறிப்பிட்டிருந்த 60 டெண்டர் படிவங்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டது. இதற்கான உத்தரவுகள் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டது. ஏலம் எடுத்தவர்கள் ஐந்து நாட்களுக்குள் ஓராண்டிற்கான ஒப்பந்த பத்திரம் மற்றும் இரு மாதத்திற்கான தொகையை வைப்புத் தொகையாக கட்டினால் மட்டுமே ஏலம் உறுதி செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக