ஒருங்கிணைந்த நெல், மீன் மற்றும் கோழி பண்ணை முறையில் அமைக்கப்பட்டுள்ள நிலம்.
சிதம்பரம்:
ஒருங்கிணைந்த பண்ணை முறை என்பது நெல் பயிருடன் மீன் மற்றும் கோழி பண்ணைகளை ஒருங்கிணைப்பதாகும்.
நெல் நடவு செய்த நிலத்தில் கோழி மற்றும் மீன் பண்ணைகளை ஒருங்கிணைப்பதன் மூலமாக விவசாயிகள் கூடுதல் லாபத்தினை பெறலாம். மீன் மற்றும் இறைச்சியின கோழி ஒருங்கிணைந்த பண்ணை திட்டமானது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இத்திட்டத்தின்படி கோழிக்கூண்டு மற்றும் மீன் அகழியானது நெல் வயலின் ஒரு பகுதியில் அமைக்கப்படுகின்றது.
இவ்வாறு அமைக்கப்பட்ட மீன் அகழியில், கோழியின் எச்சம் விழுமாறு கோழிக்கூண்டு அமைக்கப்பட வேண்டும். கோழியின் எச்சமானது மீன்களுக்கு நல்ல உணவாக பயன்படுவதோடு மட்டுமல்லாமல் சிறந்த இயற்கை உரமாகவும் செயல்படுகின்றது. நெல் வயலின் 5 செ.மீ. நீர்பரப்பில் ஏற்படும் வெப்ப மாற்றங்கள் மீன்களைப் பாதிக்கும் என்பதால் பகல் பொழுதில் மீன்கள் நீந்தி களிப்பதற்கு இந்த அகழிகள் ஏற்படுத்தப்படுகின்றன. மேலும் மீன்கள் நெல் வயலில் நீந்தி அவற்றின் களை மற்றும் பூச்சிகளை உண்டு வளரும். மேலும் கோழிக்கழிவு நேராக அகழி நீரில் கலந்து, நெல் வயலில் உள்ள நீருக்குள் ஊடுருவி உரமாக பயன்படும்.
நாற்றங்கால் தயார்படுத்தல்:
நாற்றங்காலுக்கு என ஒதுக்கப்பட்ட நிலத்தினை நன்கு சேற்று உழவு செய்து, சமன்படுத்தி தயார் நிலைக்கு கொண்டு வர வேண்டும். அறிவுறுத்தப்பட்ட அளவிலான நெல் விதைகளை, விதைப்பதற்கு 10 மணி நேரத்துக்கு முன்பாக நீரில் ஊற வைக்க வேண்டும்; பின்னர் ஊறிய விதைகளை சுமார் 24 மணி நேரம், முளைப்புக்காக இருட்டு அறையில் வைக்க வேண்டும், பின்பு முளைத்த விதைகளை சீராக நெல் நாற்றங்காலில் விதைக்க வேண்டும். நாற்றங்காலில் முளைத்த நாற்றுகளானது நன்கு பராமரிக்கப்பட வேண்டும்.
நடவு வயல் தயார் படுத்தல்:
நன்கு உழவு செய்து தயார்படுத்தப்பட்ட நடவு வயலில் 1 மீட்டர் ஆழம் மற்றும் 0.75 மீட்டர் நீளம் கொண்ட மீன் அகழியானது வெட்டப்பட வேண்டும். இந்த மீன் அகழிக்கென நடவு நிலத்தின் 10 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும். நடவு வயலில் உள்ள நீர் வெளியேறாத வண்ணம் வரப்புகள் உறுதியாக அமைக்கப்பட வேண்டும். மீன்கள் நெல் அறுவடைக்கு 15 நாள்களுக்கு முன்பு பிடித்து விற்பனை செய்யலாம். அதுபோன்று இறைச்சியின கோழி வளர்ப்பிற்கான மொத்த காலம் 45 நாள்கள். கோழிக்குஞ்சுகளை முதல் 12 நாள்கள் தனியறையில் 100 வால்ட் பல்பினை பொருத்தி வைத்திருக்க வேண்டும். 12 நாள்களுக்கு பிறகு குஞ்சுகளை நடவு நிலத்திலுள்ள கோழி கூண்டுக்கள் விடப்பட வேண்டும்.
நெல்நடவு:
குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு நாற்றங்காலில் உள்ள நாற்றுகளை நடவு நிலத்தில் 15 செ.மீ. இடைவெளியில், குத்துக்கு 2 நாற்றுகள் வீதத்தில் பிடுங்கி நடவேண்டும். வேப்ப விதைச்சாறு 5 சதவீதம், பயிர் பாதுக்காபுக்கென தெளிக்கப்படுகின்றது. இவ்வாறு செயல்படுத்தப்படும் நெல், மீன், கோழி பண்ணையத்தின் மூலம் ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் லாபம் கிடைக்கும். இத்திட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழக உழவியல்துறை ஒருங்கிணைப்பாளகராக இருந்து மத்திய அரசு நிதி உதவியுடன் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக