உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 22, 2010

சிதம்பரம் அண்ணா கலையரங்கத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க எதிர்ப்பு

சிதம்பரம்:

            சிதம்பரம் நகரில் உள்ள மிகப்பெரிய கலையரங்கமான அண்ணா கலையரங்கம் பராமரிப்பின்றி அழிந்து போகும் நிலையில் உள்ளது.

              தற்போது அங்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை அமைக்க வேளாண்துறை முடிவு செய்துள்ளது. எனவே அண்ணா நூற்றாண்டில் அண்ணா பெயரில் உள்ள இக்கலையரங்கம் மீண்டும் இயங்க தமிழக துணை முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்ப் பேரவைத் தலைவர் ராம.ஆதிமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

                சிதம்பரம் நகரில் வடக்குமெயின் ரோட்டில் அண்ணா கலையரங்கம் இயங்கி வந்த இடத்தில் தற்போது உழவர் சந்தை, சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம், வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம், வாடகை கார், வேன் ஸ்டேன்ட் என கலையரங்கம் பல்வேறாக கூறு போடப்பட்டுள்ளது. தற்போது அண்ணா கலையரங்கத்தில் மீதமுள்ள இடத்தில் முழுவதுமாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை தாற்காலிகமாக அமைக்க வேளாண்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சிதம்பரம் நகரில் அறிஞர் அண்ணா பெயரில் இயங்கி வரும் அண்ணா கலையரங்கம் இடம் ஒன்று மட்டும்தான் அவரது நினைவாக நகர எல்லைக்குள் உள்ள ஒரு பொது இடமாகும். இங்குதான் பொதுக்கூட்டங்கள், கலைநிகழ்ச்சிகள், சர்க்கஸ் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. மேலும் சிதம்பரம் நகரில் மேலவீதி, கீழவீதி ஆகிய இடங்களில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு உயர் நீதிமன்றத்தில் குடியிருப்போரால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

              இதனால் நகரில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஏதுவான இடம் கிடையாது. இந்நிலையில் அண்ணா கலையரங்கத்தில் மீதமுள்ள காலியிடத்தில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு விற்பனைக் கூடம் அமைக்கப்பட்டால் அண்ணா கலையரங்கம் நிரந்தரமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் நிரந்திரமாக அமைக்க 5 லட்சம் ஏக்கர் நிலம் தேவை என தமிழக அரசு ஆணை எண்:66 தேதி 8.3.2001-ல் உத்தரவிட்டுள்ளது. ஆனால் காலியாக உள்ள அரை ஏக்கர் நிலத்திலேயே பெயரளவுக்கு விற்பனைக் கூடம் அமைக்க வேளாண் துறையினர் முயற்சி எடுத்து வருகின்றனர். ஏற்கெனவே அண்ணா கலையரங்கத்தில் உள்ள உழவர் சந்தை, முற்றிலும் செயல்படாத நிலையில் உள்ளது. 

                கட்டப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் பூட்டப்பட்டு செயல்படாமல் உள்ளது. எனவே அண்ணா நூற்றாண்டில் அண்ணாவின் பெயரில் உள்ள இந்த கலையரங்கத்தில் செயல்படாமல் உள்ள உழவர் சந்தை, சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம், வேளான் விற்பனைக் கூடம் ஆகியவற்றை வேறு இடத்துக்கு மாற்றம் செய்து கலையரங்கத்தை சீரமைத்து மீண்டும் பழைய நிலையில் இயங்க துணை முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்ப் பேரவை தலைவர் ராம.ஆதிமூலம் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior