உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 22, 2010

பண்ணை செழிக்க பயன்படும் நுண்ணுயிர் உரங்கள்


கடலூர் மாவட்ட விவசாய அலுவலக வளாகத்தில் செயல்படும் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் நிலையம்.
 
கடலூர்:
 
            நுண்ணுயிர் உரங்களின் பயன்பாட்டால் மண்வளமும் உழவர்களின் பண்ணை வளமும் பாதுகாக்கப்படுகிறது. 
 
              இந்தியாவின் வேளாண் உற்பத்தி குறைந்து கொண்டே போகிறது. வேளாண் விளைபொருள்கள் உற்பத்தியைப் பெருக்குவதாக் கூறி, ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டை அதிகரித்ததால், விளைபொருள்கள் மட்டுமன்றி, விவசாய நிலங்களும் நச்சுத் தன்மை கொண்டதாக மாறிவருகிறது. எனவே நிலவளம், நீர்வளம் சுற்றுச்சூழலையும் பாதிக்காத சாகுபடி முறைகளை விவசாயத்தில் பின்பற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய விவசாயம் உள்ளது. உயிர் உரங்கள் இயற்கை வேளாண்மையில் முக்கிய பங்காற்றுகிறது. 
 
            மண்வளமும் நீர்வளமும்தான் வேளாண்மையின் அடித்தளம். இயற்கையாக நுண்ணுயிர் பெருக்கத்துக்குத் தேவையான தொழுஉரங்கள் மற்றும் பசுந்தாள் உரங்களை, விவசாயிகள் பயன்படுத்துவதும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே ஆலைகளில் தயாரிக்கப்பட்ட உயிர் உரங்களைப் பயன்படுத்தி அசோஸ்பைரில்லம், ரைசோபியம் போன்ற நுண்ணுயிர்களை பெருக்க வேண்டியது அவசியம் ஆகிறது.தழைச் சத்து காற்றில் 80 சதவீதம் இருக்கிறது. ஒரு ஹெக்டேர் நிலப்பரப்புக்கு மேலுள்ள காற்றில், 77,500 டன் தழைச்சத்து நிறைந்து உள்ளது. காற்றில் கலந்துள்ள இந்த அபரிமிதமான தழைச் சத்தை, அசோஸ்பைரில்லம், ரைசோபியம் போன்ற நுண்ணுயிர்கள் கிரகித்து,  பயிர்கள் எளிதில் எடுத்துக் கொள்ளும் வடிவத்தில் மாற்றிக் கொடுக்கின்றன.
 
            தழைச்சத்துக்கு அடுத்ததாக பயிர்களுக்கு அதிகம் தேவைப்படும் மணிச்சத்து, சூப்பர் பாஸ்பேட் உரங்கள் மூலம் கிடைக்கிறது. ஆனால் மண்ணில் 100 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரமிட்டால், 15 முதல் 20 கிலோ வரைதான் தண்ணீரில் கரைந்து பயிர்களுக்குக் கிடைக்கிறது.மீதமுள்ளவை ரசாயன மாற்றத்தால் மண்ணில் கரையாத நிலைக்குச் சென்றுவிடுகிறது. இது விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம். இத்தகைய கரையாத நிலையில் உள்ள மணிச்சத்தையும் கரைத்து, பயிர்களுக்குக் கொடுப்பவை நுண்ணுயிர் உரங்கள்தான்.காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்தும், மண்ணில் உள்ள கரையாத மணிச் சத்தை கரைத்தும் பயிர்களுக்குக் கொடுக்கும் சக்தி வாய்ந்தவை உயிர் உரங்கள். 
 
              எனவே விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் நெல்லுக்கும் இதர பயிர்களுக்கும் தனித்தனியாகப் பயன்படுத்தும் அசோஸ்பைரில்லம் பயறு வகைகள் மற்றும் மணிலாவுக்குத் தனித்தனியாகப் பயன்படுத்தும் ரைசோபியம் மற்றும் பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை, கடலூர் உயிர் உரங்கள் உற்பத்தி மையம் தயாரித்து வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகிக்கிறது.நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் நிறுவனம் தமிழ்நாட்டில் முதல்முறையாக 1983-ல் கடலூரில்தான் தொடங்கப்பட்டது. இங்கு ஆண்டுக்கு 270 டன் நுண்ணுயிர் உரங்கள் தயாரிக்கப்படுகின்றன.கடந்த ஆண்டு வரை தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மட்டுமே இருந்த நுண்ணுயிர் உர உற்பத்தி நிலையங்கள் இருந்தன. தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் கடந்த ஆண்டு மேலும் 9 மாவட்டங்களில் தொடங்கப்பட்டு உள்ளன.இவற்றின் மூலம் தமிழகத்தில் ஆண்டுக்கு 3,850 டன்  நுண்ணுயிர் உரம் உற்பத்தியாகும். 
 
               இவைகள் தமிழகத்தின் மொத்த நுண்ணுயிர் உரத்தேவையையும் முழுமையாக பூர்த்தி செய்யும் என்று வேளாண் துறை தெரிவிக்கிறது .நுண்ணுயிர் உரங்கள், பழுப்பு நிலக்கரி மற்றும் கால்சியம் கார்பனேட் கலவையில் கலந்து 200 கிராம் பாக்கெட்டுகளாக விற்பனை செய்யப்படுகின்றன. ரூ. 6 விலை உள்ள இந்த பாக்கெட், மானிய விலையில் விவசாயிகளுக்கு ரூ. 5-க்கு வழங்கப்படுகிறது. வேளாண் துறையின் பரிந்துரைப்படி, நுண்ணுயிர் உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தழைச்சத்துக்காக யூரியா போன்ற ரசாயன உரங்களின் பயன்பாட்டை வெகுவாக் குறைக்க முடியும்.மணிச் சத்துக்காக இடப்படும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை முழுமையாக பயிர்களுக்குக் கிடைக்கச் செய்யமுடியும், சுற்றுச் சூழலும் மண்வளமும் பாதுகாக்கப்படும் என்றும் வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior