உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 22, 2010

இருப்பிடச் சான்றுக்கு தனி ரேஷன் அட்டை


 
              வீட்டு முகவரிச் சான்றுக்கென பிரத்யேகமான ரேஷன் அட்டையை தமிழக அரசு வழங்க உள்ளது. 
 
           விண்ணப்பித்த பத்து நாள்களுக்குள் இந்த அட்டை கிடைக்கும் என உணவுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விரைவில், இதற்கான உத்தரவை அரசு வெளியிட உள்ளது. புதிய ரேஷன் அட்டை பெறுவதற்கு முதலில் பழைய அட்டையில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்பட வேண்டும். இதற்கான சான்றையும், இப்போது நீங்கள் வசிக்கும் முகவரிக்கான இருப்பிடச் சான்று இரண்டையும் புதிய ரேஷன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.  
 
            ரேஷன் அட்டை பல்வேறு வகைகளில் வழங்கப்படுகிறது. அரிசி, சர்க்கரை வாங்குவோர் அல்லது சர்க்கரை மட்டும் வாங்குவோர் அல்லது எந்தப் பொருளும் வாங்க விருப்பம் இல்லாதோர், இதில் நீங்கள் எந்தப் பிரிவுக்கும் விண்ணப்பிக்கலாம்.  முகவரிச் சான்றுக்கு மட்டும்: ரேஷனில் எந்தப் பொருளும் வாங்க விருப்பம் இல்லாதவர்கள் முகவரிச் சான்றுக்காக மட்டுமே ரேஷன் அட்டையைப் பயன்படுத்துகிறார்கள். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க, கேஸ் இணைப்பு பெற இப்படி இதர பயன்பாடுகளுக்காக ரேஷன் அட்டையை பயன்படுத்துவோரும் உண்டு.  
 
            எந்தப் பொருளையும் பெறாமல் இருப்பிடச் சான்றுக்காக மட்டுமே ரேஷன் அட்டை பெற விரும்புவோருக்குக் கூட இப்போதுள்ள கட்டுப்பாடுகளே பொருந்தும். பழைய அட்டையில் பெயரை நீக்கிய பிறகே அவர்களுக்கு புதிய அட்டை வழங்கப்படும்.  இந்த முறை விண்ணப்பதாரர்களுக்கு தாமதம் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதால் தமிழக அரசு புதிய திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.  
 
"என்' அட்டைகள்: 
 
           இந்தத் திட்டத்துக்கு "என்' ரேஷன் அட்டை (ச-சர்ய்) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதைப் பெறுவதற்கு இப்போதுள்ள நடைமுறையைப் பின்பற்றலாமா? அல்லது எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல் இருக்கலாமா? என்பது குறித்து உணவுத் துறை ஆலோசித்து வருகிறது. விதிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் அரசு உத்தரவு வெளியிடப்படும் என்று அந்தத் துறையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.  10 நாளில் கிடைக்க ஏற்பாடு: இருப்பிடச் சான்றுக்கென தபால் துறை சார்பில் தனியாக அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. 
 
              இந்த அட்டையைப் பெற ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், இதற்கான நேரடி விசாரணை முடிந்த பிறகு 15 நாள்களுக்குப் பிறகே அட்டை கிடைக்கும்.  ஆனால், விண்ணப்பித்த 10 நாள்களுக்குள் "என்' ரேஷன் அட்டையைப் பெறலாம் என உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக ஒரு ரேஷன் அட்டையைப் பெற ஓரிரு மாதங்கள் ஆகும். ஆனால், இருப்பிடச் சான்றுக்கான ரேஷன் அட்டை இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும். யாருக்குப் பயன்: பணி மாறுதல் பெற்று வேறு ஊர்களுக்குச் செல்வோர், வாடகை வீடுகளில் வசிப்போர் ஆகியோருக்கு இந்த "என்' அட்டை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior