திட்டக்குடி :
திட்டக்குடி அருகே இந்திய கம்யூ., பெண் நிர்வாகியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி அரசு மருத்துவமனை முன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கோடங்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம கிளை நூலகம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக ஊராட்சிக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் தேர்வு செய்த இடத்திலிருந்த ஆக்கிரமிப்பாளர்கள் காலி செய்யாமல் இருந்தனர்.
இதில் டேவிட் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தானாகவே ஆக்கிரமிப்பினை அகற்றி கொண்டார். மற்றொரு ஆக்கிரமிப்பாளரான மலைக்கள்ளன் இடத்தினை விட்டு வெளியேறாமல் பிரச்னை செய்து வந்தார். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக இந்திய கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன், அவரது மனைவி இந்திய சம்மேளன சங்க மாவட்ட துணைத் தலைவர் அம்பிகா ஆகிய இருவரும் கிராம மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர் தரப்பைச் சேர்ந்த மூன்று பேர் நேற்று மாலை வயலுக்கு சென்ற அம்பிகாவை தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு, மேல் சிகிச்சைக்காக கடலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதனையறிந்த கிராம மக்கள், அம்பிகாவை தாக்கிய மலைக்கள்ளன், பிலிப்குமார், பேரின்பம் ஆகியோரை உடனடியாக கைது செய்யக் கோரி இந்திய கம்யூ., வட்ட செயலாளர் மகாலிங்கம், சின்னதுரை உட்பட சுமார் 30க்கும் மேற்பட்டோர் மாலை 5.55 மணிக்கு அரசு மருத்துவமனை முன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த திட்டக்குடி சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட் டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்ததன் பேரில் 6.10 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் பதினைந்து நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக