உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 12, 2010

நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் அலைமோதும் கூட்டம்


 
நெய்வேலி:
 
             நெய்வேலி 13-வது புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களைக் காண வாசகர்களின் கூட்டம் அலை மோதுகிறது. நெய்வேலி 13-வது புத்தகக் கண்காட்சி நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள லிக்னைட் அரங்கில் வெள்ளிக்கிழமை முதல் நடைபெறுகிறது.
 
               இப்புத்தகக் கண்காட்சியைக் காண ஏராளமான வாசகர்கள் வந்தவண்ணம் இருப்பதைக் காணும் போது, புத்தகப் பதிப்பாளர்களின் எதிர்காலம் வலுவான நிலையில் உள்ளது என்று கூறினால் மிகையாகாது.சனிக்கிழமை புத்தகக் கண்காட்சியைக் காண வந்திருந்தோரின் எண்ணிக்கை சுமார் 20 ஆயிரம் பேரை தாண்டியுள்ளது. சிறிய நகரமான நெய்வேலியில் புத்தகக் கண்காட்சியைக் காண இவ்வளவு கூட்டம் வருவது என்பது சற்று ஆச்சரியம் தரக்கூடிய விஷயம் என்றாலும், புத்தகப் பதிப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இது ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.புத்தகக் கண்காட்சியை வெறும் காட்சியாக மட்டும் பார்க்காமல் அவற்றில் தங்களுக்குத் தேவையான புத்தகம் எது, என்பதை ஆராய்ந்து அதை வாங்கிச் செல்லும் வாசகர்கள் அதிகம். 
 
              மேலும் இப்புத்தகக் கண்காட்சிக்கு மேலும் மெருகூட்டக் கூடிய அம்சங்களாக, அங்காடிகள் அமைக்கப்பட்டிருக்கும் விதமும், பதிப்பாளர்களுக்கு என்எல்சி நிறுவனம் செய்துதருகின்ற வசதிகளும் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளதால் பதிப்பாளர்கள் ஆர்வமுடன் இப்புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கின்றனர்.இதுதவிர புத்தகக் கண்காட்சி அரங்கில் புழுதி ஏற்படாத வண்ணம் சிமென்ட் தரை அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் களைப்படையாமல் இருக்க தேநீர் அங்காடிகள், சிறுவர், சிறுமியரை மகிழ்விக்கக் கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள், சுகாதாரத்தை பேணிக்காக்கின்ற வகையில் நடமாடும் கழிப்பறை, அங்காடிகளுக்கு நடுவே இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம், அறிவுப் பசிக்குத் தேவையானவற்றை வாங்கிய பிறகு, வயிற்றுப் பசிக்குத் தேவையானவற்றை வாங்கி உண்பதற்கு ஏதுவாக உணவகப்பிரிவு என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய புத்தகக் கண்காட்சியாக இது விளங்குவதால் பார்வையாளர்களின் கூட்டம் அலை மோதாமல் இருக்குமா என்ன?

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior